தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜெகன் என்ற 42 வயதுடைய சுவிசேஷராஜ். இவர் தூத்துக்குடி அண்ணா நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் “தங்கக்கட்டி” என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி பிரபலமானவர், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளின் பூத்துகளுக்கு பிரியாணி சப்ளை செய்வதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து டூவிபுரம், ஸ்பிக் நகர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் கிளை பிரியாணி கடை தொடங்கி கார் வீடு வாங்கி புகழ் பெற்று வசதியாக வாழ்ந்து வந்தார்.
இவரது தொழிலில் திடீர் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே சுவிசேஷராஜ் அனைத்து கடைகளையும் மூடி விட்டு கடைசியாக தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை லெவிஞ்சிபுரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் சுவிசேஷராஜ்க்கும் அவரது உறவினர்களுக்கும் கருது வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு அது அடிதடியாக மாறியுள்ளது. இந்த பிரச்சனை குறித்து அளித்த புகாரின் பேரில் கடந்த (அக்டோ 4) ஆம் தேதி முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் சுவிசேஷராஜ் தான் நடத்தி வந்த ஹோட்டல் நஷ்டம் அடைந்த நிலையிலும், மேற்படி குடும்ப பிரச்சினை காரணமாகவும் மன உளைச்சல் அடைந்து மருத்துவமனையில் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுவிசேஷராஜ் முத்தையாபுரம் காவல் நிலையம் சென்று “தனது உறவினர் தனது பைக் மற்றும் செல்போனை உடைத்து விட்டதாக கூறி அதற்காக புதிதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
அவர் மது போதையில் இருந்ததால் காலையில் காவல் நிலையம் வருமாறு கூறி போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சுவிசேஷராஜ் வீட்டிற்கு செல்லாமல் காவல் நிலையம் முன்பு திருச்செந்தூர் சாலையில் நின்று தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து தனது உடலில் ஊற்றி திடிரென தீ குளித்துள்ளார். பின்னர் காயம் தாள முடியாமல் அலறி உள்ளார். இதனைப் பார்த்து உடனடியாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் தீயை அணைத்து அவரை மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சுவிசேஷராஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். காவல் நிலையம் முன்பு ஒருவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.