ஆடை உற்பத்தியில் அகில உலக அளவில் முன்னின்ற திருப்பூர், ஆயத்த ஆடைகளாகட்டும்; விதம் விதமான உள்ளாடைகளாகட்டும் எல்லாவற்றுக்கும் தாயகமாக விளங்கியது. இங்கு வருடத்திற்கு சுமார் 35,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில் ஏற்றுமதிக்கு நிகராக உள்நாட்டு வியாபாரமும் அமோகமாக நடைபெற்று வந்தது.
குறிப்பாக டாலர்பேட்டை என்று அழைக்கக்கூடிய காதர் பேட்டையில் ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கிச் சென்று அந்தந்த மாநில சந்தையில் விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில், தற்சமயம் திருப்பூரில் மின் கட்டண உயர்வு, வாடகை உயர்வு, தொழிலாளர் சம்பளம் போன்ற காரணங்களால் பனியன் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், ஆடைகளின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கும் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர்.
இதனால் வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்தே காணப்படுகிறது. மேலும் சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாலியஸ்டர் ஆடைகள் அதிகளவு சந்தைக்கு வந்ததால் காட்டன் மார்க்கெட் மிகவும் மோசமாக நிலையை எட்டியுள்ளது.
இங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் உற்பத்தியை கற்றுக் கொண்டு அவரவர் மாநிலத்திற்கு சென்று அம்மாநில அரசின் பல்வேறு சலுகைகளுடன் பின்னலாடை நிறுவனங்களை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பிற மாநில வியாபாரிகளின் வரவு குறைந்து டாலர் பேட்டை என்று அழைக்கக்கூடிய காதர்பேட்டையில் 30 சதவீதத்திற்கும் மேலான கடைகள் மூடப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் கேரளா தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வந்த நிலையில், தற்பொழுது பின்னலாடை தொழிலை கற்றுக்கொண்டு அவர்கள் குடிசைத்தொழில் போல் கேரளாவில் செய்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான ஆடைகளை அவர்களே வடிவமைத்து கொள்வதாகவும் கூறப்படுகிறது . திருப்பூரில் இருந்து கேரளாவுக்கு பனியன் வண்டல் அனுப்பிய காலம் போய் தற்பொழுது, பனியன் துணிகளாக அனுப்பப்பட்டு வருவதாக தெரிகிறது.
ஓணம் பண்டிகைக்கு கேரளாவில் இருந்து திருப்பூருக்கு வரும் ஆடை வியாபாரிகள், பல கோடி வர்த்தகம் செய்து வந்த நிலையில், அதில் தற்போது 10% கூட வர்த்தகம் நடைபெறவில்லை என திருப்பூர் வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையை சீர்படுத்தாவிட்டால், பின்னலாடை நகரம் காணாமல் போய்விடும் என்று உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு பாலிஸ்டர் ஆடைகள் வரவு, மின் கட்டண உயர்வு, வாடகை உயர்வு, தொழிலாளர் சம்பள உயர்வு, வெளிமாநில வியாபாரிகள் வரத்து குறைவு ஆகியவற்றால் உள்நாட்டு சந்தையும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு தீர்வு காண்பதோடு, குறைந்த வாடகையில் பனியன் சந்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்று திருப்பூர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலை முரசு தொலைக்காட்சி திருப்பூர் செய்தியாளர் மணிகண்டனுடன் நந்தகுமார் திருப்பூர் செய்தியாளர் ம்ணிகண்டனுடன்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.