மாவட்டம்

உதகையில் பூத்து குலுங்கும்  காட்டு சூரியகாந்தி மலர்கள்...திரண்டு வரும் சுற்றுலா பயணிகள்...

Malaimurasu Seithigal TV

"மலைகளின் ராணி" என்று அழைக்கப்படும் உதகையில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவர இனங்களும் வளருவதற்கான இதமான காலநிலை நிலவுகிறது. நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் காட்டு சூரியகாந்தி விதைகள் உதகை கல்லட்டி மலைப்பாதை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.'டித்தோனியா டிவர்சிபோலியா' என்ற தாவர இனத்தை சேர்ந்த இந்த செடி அடர்த்தியாக வளர்கிறது. வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த பூக்களால், மண்ணின் உறுதித் தன்மை அதிகரிப்பதுடன், நிலச்சரிவையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி பூக்கள் இந்த ஆண்டு தற்போது பூத்து குலுங்குகின்றன.

உதகையில் இருந்து தெப்பக்காடு செல்லும் பிரதான கல்லட்டி மலைபாதை ஓரங்களிலும், சரிவுகளிலும் கொத்துக்கொத்தாக இந்த மலர்கள் பரவலாக பூத்துள்ளன. வாசமில்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கி காண்போரை வசீகரிக்கிறது.பொதுவாகவே உதகையில் மலர் கண்காட்சி வருடத்திற்கு ஒருமுறை வெகு விமர்சியாக நடைபெறும். இதை காண்பதர்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக பல்வேறு இடங்களிருந்து அணி திரண்டு வருவர்.கண்ணுக்கு குளிர்ச்சியாக வண்ண வண்ண வித விதமான மலர்களை இங்கே நாம் காணலாம். இந்த உதகையில் இப்போது காட்டு சூரியகாந்தி மலர்கள் காட்சி அளிக்கின்றன.