12ஆம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் பெரும்பாலான மாணவர்களுக்கும் இருக்கும். குறிப்பாக, மருத்துவம் அல்லது பொறியியல் படிப்புகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த இரண்டு துறைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் பல பெற்றோர்களிடம் உள்ளது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் சிறந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளன. மாணவர்களின் ஆர்வம், திறமை மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்ப தேர்வு செய்ய ஏராளமான படிப்புகள் காத்திருக்கின்றன.
12ஆம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்கள் முதலில் தங்களுடைய ஆர்வம் எந்தத் துறையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவர்கள் தேர்வு செய்யும் படிப்பையே நாமும் தேர்வு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு படிப்பைத் தேர்வு செய்வதையும் தவிர்க்க வேண்டும். அந்தப் படிப்பில் என்ன கற்பிக்கப்படுகிறது, எதிர்காலத்தில் என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும், அதற்குத் தேவையான திறன்கள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு முடிவெடுப்பது அவசியம்.
நிர்வாகம், தொழில் தொடங்குதல், நிறுவனங்களை வழிநடத்துதல் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்கள் மேலாண்மைத் துறையைத் தேர்வு செய்யலாம். 12ஆம் வகுப்புக்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த மேலாண்மைப் படிப்புகளும் உள்ளன. இதில் நிதி, பொருளாதாரம், சந்தைப்படுத்துதல், புள்ளியியல் மற்றும் தொழில்முனைவு தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் நிறுவன நிர்வாகம், சந்தைப்படுத்துதல் மற்றும் வணிக ஆலோசனை போன்ற துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், விலைவாசி உயர்வு, வங்கித்துறை போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் பொருளாதாரப் படிப்பைத் தேர்வு செய்யலாம். இந்தப் படிப்பின் மூலம் நாட்டின் பொருளாதார நிலை, பணப்புழக்கம் மற்றும் சந்தை மாற்றங்கள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும். பொருளாதார ஆய்வு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
பணம், முதலீடு, பங்குச்சந்தை மற்றும் வங்கி நிர்வாகம் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு நிதித்துறை சிறந்த தேர்வாக இருக்கும். நிறுவனங்கள் தங்களுடைய நிதியை எவ்வாறு நிர்வகிக்கின்றன, முதலீடுகளை எப்படித் திட்டமிடுகின்றன, நிதி அபாயங்களை எவ்வாறு கையாளுகின்றன போன்றவற்றை இந்தப் படிப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம். நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.
படைப்பாற்றல் மற்றும் தகவல் தொடர்புத் திறன் கொண்ட மாணவர்கள் சந்தைப்படுத்துதல் துறையையும் தேர்வு செய்யலாம். ஒரு பொருளை மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது, வாடிக்கையாளர்களின் விருப்பங்களை எப்படிப் புரிந்துகொள்வது, விளம்பரங்களை எவ்வாறு உருவாக்குவது போன்றவை இந்தத் துறையின் முக்கிய அம்சங்களாகும். தற்போது டிஜிட்டல் உலகின் வளர்ச்சியால் சமூக வலைதள மேலாண்மை, ஆன்லைன் விளம்பரம் மற்றும் பிராண்ட் உருவாக்கம் போன்ற பிரிவுகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
மனிதர்களின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளைப் புரிந்துகொள்வதில் ஆர்வம் உள்ள மாணவர்கள் உளவியல் படிப்பைத் தேர்வு செய்யலாம். மனித மனம் எவ்வாறு செயல்படுகிறது, மன அழுத்தம் மற்றும் உணர்வுகளை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படிப்பின் மூலம் கற்றுக்கொள்ள முடியும். ஆலோசனை, கல்வி, மனிதவள மேலாண்மை மற்றும் ஆய்வுத்துறை போன்ற பிரிவுகளில் வாய்ப்புகள் உள்ளன. சில பணிகளுக்கு கூடுதல் உயர்கல்வி மற்றும் சிறப்புப் பயிற்சி தேவைப்படும்.
ஒரே ஒரு பாடத்தில் கவனம் செலுத்தாமல் பல்வேறு துறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு தாராளக் கலைப் படிப்புகள் (Liberal Studies) உதவியாக இருக்கும். அரசியல் அறிவியல், பொருளாதாரம், உளவியல், தத்துவம், கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை இணைத்துப் படிக்கலாம். இதன் மூலம் சிந்திக்கும் திறன், புதிய விஷயங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மற்றும் தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.
வணிகம், கணக்கியல் மற்றும் நிறுவன நிர்வாகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் வணிகவியல் படிப்புகளைத் தேர்வு செய்யலாம். இந்தப் படிப்பை முடித்த பிறகு சிஏ (CA), சிஎஸ் (CS), சிஎம்ஏ (CMA) போன்ற தொழில்முறைப் படிப்புகளையும் தொடரலாம். கணக்குத் தணிக்கை, வரி ஆலோசனை, நிறுவன நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. சமூகப் பிரச்சினைகள், அரசு திட்டங்கள் மற்றும் நாட்டின் நிர்வாகம் குறித்து ஆர்வம் உள்ளவர்கள் பொதுக் கொள்கைத் துறையைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். அரசு எவ்வாறு திட்டங்களை உருவாக்குகிறது, மக்களுக்கான நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை இந்தத் துறையில் கற்றுக்கொள்ளலாம். அரசு நிறுவனங்கள், ஆய்வு அமைப்புகள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன.
சட்டம், நீதி மற்றும் மக்களின் உரிமைகள் குறித்து ஆர்வம் உள்ள மாணவர்கள் சட்டப் படிப்பைத் தேர்வு செய்யலாம். 12ஆம் வகுப்புக்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர முடியும். வழக்கறிஞராகப் பணியாற்றுவது மட்டுமின்றி, நிறுவனச் சட்டம், இணையப் பாதுகாப்பு, தனிநபர் தகவல் பாதுகாப்பு போன்ற புதிய பிரிவுகளிலும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இவ்வாறு மருத்துவம் மற்றும் பொறியியலைத் தாண்டி மாணவர்கள் தேர்வு செய்வதற்கு ஏராளமான படிப்புகள் உள்ளன. ஆனால், கல்லூரியில் சேருவதற்கு முன்பு அந்தப் படிப்புக்கான கல்வித் தகுதி, சேர்க்கைத் தேர்வு, பாடத்திட்டம், கல்லூரியின் அங்கீகாரம், கல்விக் கட்டணம் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
12ஆம் வகுப்பு என்பது மாணவர்களின் கல்விப் பயணத்தில் முக்கியமான கட்டமாகும். இந்த நேரத்தில் நண்பர்கள், உறவினர்கள் அல்லது பெற்றோரின் விருப்பத்திற்காக மட்டும் படிப்பைத் தேர்வு செய்யாமல், தங்களுடைய ஆர்வத்தையும் திறமையையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் மட்டுமே வெற்றிக்கான பாதைகள் அல்ல. சரியான படிப்பைத் தேர்வு செய்து அதில் முழு ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டால் எந்தத் துறையிலும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.