இந்தியாவிலிருந்து உயர்கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 31% வரை குறைந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார், இந்திய மாணவர்களின் வெளிநாட்டுப் பயணம் குறித்த புள்ளிவிவரங்களை விரிவாக வெளியிட்டுள்ளார். இந்தத் தரவுகளின்படி, கடந்த இரண்டாண்டுகளில் இந்திய மாணவர்களின் வெளிநாட்டு மோகம் கணிசமாகக் குறைந்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் ஒன்பது 9.08 லட்சம் இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். ஆனால், இந்தப் புள்ளிவிவரம் 2024 ஆம் ஆண்டில் 7.7 லட்சமாகக் குறைந்தது. அதனைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து 6.25 லட்சம் என்ற நிலையை எட்டியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
வெளிநாடுகளில் கல்வி பயில்வது என்பது தனிப்பட்ட விருப்பம் மற்றும் முடிவுகளைச் சார்ந்தது என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர், நிதி வசதி, வங்கிக் கடன்கள் கிடைப்பது, வெளிநாட்டுச் சமூகங்களின் மீதான ஆர்வம் மற்றும் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளின் மீதான ஈடுபாடு போன்ற காரணிகள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று விளக்கினார். இருப்பினும், இன்றைய அறிவுசார் பொருளாதாரச் சூழலில் உலகளாவிய பணித்தளங்களின் யதார்த்தத்தை அரசு அங்கீகரிக்கிறது என்றும், வெளிநாடுகளில் வாழும் வளமான மற்றும் செல்வாக்கு மிக்க இந்தியச் சமூகம் நாட்டின் ஒரு முக்கியச் சொத்தாகக் கருதப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் குறைத்து, உள்நாட்டிலேயே தரமான கல்வி பெறுவதை ஊக்குவிக்கத் தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், அங்கீகார முறைகளை வலுப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் டிஜிட்டல் கல்வி முயற்சிகளை விரிவுபடுத்துதல் போன்றவை இதில் அடங்கும். இதன் மூலம் இந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களே இந்தியாவில் தங்களது கிளைகளைத் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலியா, இத்தாலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பதினான்கு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவில் வளாகங்களை அமைக்க அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குஜராத்தில் உள்ள கிஃப்ட் சிட்டியில் ஐந்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்களது செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளன. இதன் மூலம் இந்திய மாணவர்கள் தங்கள் தாய்நாட்டிலேயே தங்கியிருந்து உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் குடியேற்ற விதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள கடுமையான மாற்றங்களே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கனடா அரசு மாணவர் விசாக்களுக்குக் உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளதுடன், இங்கிலாந்து அரசு மாணவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவதற்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், அமெரிக்காவிலும் விசா நடைமுறைகள் மற்றும் சமூக ஊடகத் தணிக்கை போன்ற கடுமையான விதிகள் மாணவர்களிடையே ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் இந்திய மாணவர்கள் மாற்று வழிகளைத் தேடத் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.