List of Top 10 Colleges in America  
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

அமெரிக்காவில்.. வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி.. சிறந்த 10 கல்லூரிகளின் லிஸ்ட்!

நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், LinkedIn மற்றும் பல தரவரிசைகளில் முதலிடத்தில் உள்ளது. இதன்...

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் கல்லூரிகள் குறித்து இங்கே பார்க்கலாம். இந்த தகவல் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்குச் சரியான கல்லூரியைத் தேர்வு செய்ய உதவும்.

இந்தத் தரவரிசைகள், பட்டப்படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பு கிடைப்பது, முன்னாள் மாணவர்களின் தொழில் வளர்ச்சி, தலைமைப் பதவிகளை அடைவது, மற்றும் கல்லூரியின் தொழில்முறை தொடர்பு வலைப்பின்னல் (Alumni Network) ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் நீண்ட கால வேலைவாய்ப்பு வெற்றிக்கு உதவும் சிறந்த 10 கல்லூரிகள்:

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (Princeton University):

நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், LinkedIn மற்றும் பல தரவரிசைகளில் முதலிடத்தில் உள்ளது. இதன் கடுமையான கல்வித் திட்டமும், வலுவான முன்னாள் மாணவர்களின் நெட்வொர்க், நிதி, தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் முன்னணி பதவிகளைப் பெற உதவுகிறது. இந்த பல்கலைக்கழகம், மாணவர்களுக்குப் பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தொழில் சப்போர்ட் வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.

டியூக் பல்கலைக்கழகம் (Duke University):

வட கரோலினாவில் உள்ள டியூக் பல்கலைக்கழகம், மாணவர்கள் தொழில்முறை வாழ்க்கைக்குத் தயாராவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறது. இதன் தொழில் மையத்தின் மூலம், மாணவர்கள் சுகாதார, வணிக மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறப்பான வேலைவாய்ப்புகளைப் பெறுகிறார்கள். இந்த விரிவான அணுகுமுறை காரணமாக, இங்குள்ள பட்டதாரிகள் அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலைகளைப் பெறுகிறார்கள்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகம் (University of Pennsylvania - UPenn):

யுபென், குறிப்பாக அதன் வார்டன் பள்ளி (Wharton School) நிதி மற்றும் வணிகக் கல்விக்கு உலக அளவில் புகழ்பெற்றது. இங்குள்ள மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளைப் பெறுவதோடு, வலுவான தொழில்முறை தொடர்புகளை வளர்த்துக் கொள்கிறார்கள். இதன் மூலம், உலகெங்கிலும் உள்ள சிறந்த நிறுவனங்களில் சேர தேவையான திறன்களை அவர்கள் பெறுகிறார்கள்.

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT):

தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறையில், MIT பட்டதாரிகள் தனித்துவமான திறன் மற்றும் புத்தாக்க சிந்தனையால் முன்னணியில் உள்ளனர். MIT-யின் வலுவான பெருநிறுவன உறவுகள், மாணவர்களுக்கு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் புதுமையான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற உதவுகின்றன. AI, ரோபாட்டிக்ஸ் மற்றும் கணினி நிரலாக்கத் திறன்களைப் பெறுவதில் MIT சிறந்து விளங்குகிறது.

கார்னெல் பல்கலைக்கழகம் (Cornell University):

நியூயார்க்கில் உள்ள இந்த ஐவி லீக் (Ivy League) பள்ளி, விரிவான கல்வித் திட்டத்திற்கு பெயர் பெற்றது. தொழில்நுட்பம், நிதிச் சேவைகள் மற்றும் உயர்கல்வித் துறைகளில் இதன் பட்டதாரிகள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இங்குள்ள மாணவர்கள், நியூயார்க், பாஸ்டன் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்ற நகரங்களில் முன்னணி நிறுவனங்களில் வேலை பெறுகிறார்கள்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University):

உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அதன் உயர்தர கல்வி மற்றும் வலுவான முன்னாள் மாணவர் வலைப்பின்னலுக்காக அறியப்படுகிறது. ஹார்வர்ட் பட்டதாரிகள் நிதி, வணிக ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் எளிதாக வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். இங்குள்ள கடுமையான கல்வித் திட்டமும், ஆராய்ச்சியும் மாணவர்களைத் தொழில் வாழ்க்கையில் உயர் நிலையை அடைய உதவுகிறது.

பாப்சன் கல்லூரி (Babson College):

மாசசூசெட்ஸ் நகரில் உள்ள பாப்சன் கல்லூரி, தொழில்முனைவோர் கல்விக்கு மிகவும் பிரபலமானது. இந்த கல்லூரி தொழில்முனைவு மற்றும் தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இங்குள்ள மாணவர்கள், வலுவான தொழில்முறை வலைப்பின்னல் மற்றும் தொழில்முனைவோர் திறன்களால், தங்கள் சொந்த நிறுவனங்களைத் தொடங்குவதில் அல்லது முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளைப் பெறுவதில் சிறந்து விளங்குகிறார்கள்.

நோட்ரே டேம் பல்கலைக்கழகம் (University of Notre Dame)

இந்தியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகம், சிறந்த வேலைவாய்ப்பு விகிதங்களுக்காகப் புகழ்பெற்றது. இங்குள்ள பட்டதாரிகள் வணிக ஆலோசனை, நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

டார்ட்மவுத் கல்லூரி (Dartmouth College)

நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள இந்த ஐவி லீக் கல்வி நிறுவனம், வலுவான தொழில்முறை தொடர்பு நெட்ஒர்க் கொண்டுள்ளது. இங்குள்ள பட்டதாரிகள் நிதி, தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை போன்ற துறைகளில் அதிகத் தேவையுடன் இருக்கிறார்கள்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (Stanford University)

சிலிக்கான் பள்ளத்தாக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், புதுமை மற்றும் தலைமைத்துவத்திற்கான ஒரு மையமாகத் திகழ்கிறது. இங்குள்ள பட்டதாரிகள், தொழில்முனைவோர் மற்றும் தலைமைப் பதவிகளில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் இங்கு வழங்கப்படும் உயர்தர பயிற்சி, மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.