நீட் உள்ளிட்ட முக்கிய போட்டித் தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, போட்டித் தேர்வுகளை சீரமைக்கும் நோக்கத்துடன் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்னன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்த நிலையில், 101 பரிந்துரைகளை அளித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், அதனை மக்களின் பார்வைக்கும் வைப்பதாகவும் தர்மேந்திரா பிரதான் கூறினார்.
நீட் நுழைவுத் தேர்வு நடைமுறைகள் மாற்றி அமைக்கப்படும் என கூறிய தர்மேந்திரா பிரதான், தேர்வுகளை பேனா, பேப்பர் முறையில் நடத்துவதா அல்லது ஆன்லைனில் நடத்துவதா என்பது குறித்து சுகாதார அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும் என்றும், ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தாது எனவும் கூறியுள்ளார்.