கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, படிக்கும்போதே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. கல்லூரி முடிந்ததும் கடைகளில் வேலை செய்வது, உணவு டெலிவரி செய்வது, கால் சென்டர்களில் பணியாற்றுவது, ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்டுவது எனப் பல வழிகளில் மாணவர்கள் பகுதி நேர வேலைகளில் ஈடுபடுகின்றனர். சொந்தமாகச் சம்பாதிக்க வேண்டும், பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க வேண்டும், தங்களுடைய தேவைகளுக்குப் பெற்றோரிடம் பணம் கேட்கக்கூடாது என்ற எண்ணம் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால், இந்த முயற்சி படிப்பையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் அளவுக்கு மாறிவிடக் கூடாது என்பதுதான் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.
இன்றைய காலகட்டத்தில் கல்விச் செலவு, விடுதிக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, உணவுச் செலவு என மாணவர்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. இதனால் பலர் படிப்புடன் சேர்த்து வேலை செய்ய வேண்டிய சூழலில் உள்ளனர். குறிப்பாக உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், டெலிவரி நிறுவனங்கள் மற்றும் இணையவழி வேலைகள் மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன. சமூக வலைதளங்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தளங்கள் மூலமாகவும் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இந்தியாவில் கிக் வேலைவாய்ப்புகள் வேகமாக வளர்ந்து வருவதை மத்திய அரசின் 2023-24 பொருளாதார ஆய்வறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது. நிதி ஆயோக் கணிப்பின்படி, 2020-21ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 77 லட்சம் பேர் கிக் பொருளாதாரத்தில் பணியாற்றியுள்ளனர். 2029-30ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கினாலும், படிக்கும் மாணவர்கள் தங்களுடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியமானதாகிறது.
சில மாணவர்கள் ஆரம்பத்தில் கல்விச் செலவுக்காக மட்டுமே வேலைக்குச் செல்கின்றனர். ஆனால், நாளடைவில் சம்பாதிக்கும் பணத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்படுகிறது. ஒரு நாளில் குறிப்பிட்ட தொகையைச் சம்பாதிக்க வேண்டும், வார இறுதியில் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. இதனால் படிப்பதற்கான நேரம் குறைகிறது. கல்லூரி வகுப்புகளைத் தவிர்ப்பது, வீட்டுப்பாடங்களைத் தள்ளிப்போடுவது, தேர்வுக்கு முந்தைய நாட்களில் மட்டுமே படிப்பது போன்ற பழக்கங்கள் உருவாகலாம்.
ஒரு மாணவர் தினமும் காலையில் கல்லூரிக்குச் சென்று, மாலையில் வேலைக்குச் சென்று, இரவு தாமதமாக வீடு திரும்பினால் அவருக்குப் போதுமான ஓய்வு கிடைக்குமா? அடுத்த நாள் வகுப்பில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியுமா? படித்த பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா? இத்தகைய கேள்விகளை ஒவ்வொரு மாணவரும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஓய்வில்லாமல் வேலை செய்வதால் உடல் சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
பகுதி நேர வேலை செய்வது எல்லா மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூற முடியாது. சரியான நேர மேலாண்மையுடன் வேலை செய்பவர்கள் பொருளாதாரச் சுதந்திரம், தன்னம்பிக்கை, தகவல் தொடர்புத் திறன் மற்றும் பணியிட அனுபவம் போன்ற பல நன்மைகளைப் பெறுகின்றனர். ஆனால், வேலைக்காக அதிக நேரம் செலவிட்டு கல்வியைப் புறக்கணிப்பவர்களுக்கு எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாகப் படிக்கும் துறையில் தேவையான அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்ள முடியாமல் போகலாம்.
மாணவர்கள் பகுதி நேர வேலைக்குச் செல்லும் முன்பு சில விஷயங்களைத் தெளிவாகத் திட்டமிட வேண்டும். முதலில், கல்லூரி வகுப்புகளும் படிக்கும் நேரமும் பாதிக்கப்படாத வகையில் வேலை நேரத்தைத் தேர்வு செய்ய வேண்டும். தினமும் எத்தனை மணி நேரம் வேலை செய்யலாம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். தேர்வு நேரங்களில் வேலை நேரத்தைக் குறைப்பது நல்லது. அதேபோல், போதுமான தூக்கம், உணவு மற்றும் ஓய்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பெற்றோர்களும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பிள்ளைகள் சம்பாதிக்கிறார்கள் என்பதற்காக அவர்களைத் தொடர்ந்து வேலை செய்ய ஊக்குவிப்பதைவிட, அவர்களின் படிப்பு மற்றும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் வேலை செய்யும் இடம் பாதுகாப்பானதா, சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா, வேலை நேரம் படிப்புக்கு இடையூறாக இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்களுக்கு ஏற்ற பாதுகாப்பான பகுதி நேர வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல்களை வழங்கலாம்.
மாணவர்களே, சொந்தமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானதல்ல. ஆனால், சில மணி நேர வேலைக்காக உங்கள் கல்வியையும் கனவுகளையும் இழந்துவிடாதீர்கள். இன்று கிடைக்கும் சிறிய வருமானம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். ஆனால், கல்வி மூலம் கிடைக்கும் அறிவும் திறமையும் உங்கள் எதிர்கால வாழ்க்கையை உயர்த்த உதவும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் வாழ்க்கையில் தொடர்ந்து கிடைக்கலாம். ஆனால், மாணவர் பருவத்தில் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளையும் கற்றுக்கொள்ளும் நேரத்தையும் மீண்டும் பெற முடியாது. எனவே, வேலை செய்யுங்கள்; அனுபவம் பெறுங்கள்; அதே நேரத்தில் படிப்பையும் உடல்நலத்தையும் ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். சம்பாதிப்பதற்கும் சாதிப்பதற்கும் இடையே சரியான சமநிலையை உருவாக்குவதே வெற்றிகரமான எதிர்காலத்திற்கான முதல் படியாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.