cbse  
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

பள்ளிகளில் இனி ஆங்கிலம் இனி 'வெளிநாட்டு மொழி' தானா? பொதுத்தேர்வு விதிகளில் வந்த அதிரடி திருப்பம்!

இந்த மதிப்பெண்கள் மொத்தக் கணக்கில் சேர்க்கப்படாது என்றாலும், மதிப்பெண் சான்றிதழில் தனியாகக் குறிப்பிடப்படும்...

மாலை முரசு செய்தி குழு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தனது பாடத்திட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. தேசிய கல்வி கொள்கையின் பரிந்துரைப்படி, வரும் 2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழி பாடத் திட்டம் (Three-Language Formula) கட்டாயமாக்கப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு மொழி பாடங்களுக்குப் பதிலாக, இனி மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்ற இந்த புதிய விதிமுறை, படிப்படியாக அமல்படுத்தப்பட்டு 2031-ஆம் ஆண்டு நடைபெறும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய மாற்றத்தின்படி, மொழிகள் R1, R2 மற்றும் R3 என மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படும். இதில் R1 என்பது மாணவரின் தாய்மொழி அல்லது முதன்மை மொழியாகவும், R2 இரண்டாம் மொழியாகவும், R3 மூன்றாவது மொழியாகவும் இருக்கும். குறிப்பாக, இந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியாவைச் சேர்ந்த மொழிகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஆங்கிலம் இனி ஒரு 'வெளிநாட்டு மொழியாகவே' கருதப்படும் என்றும், மாணவர்கள் ஆங்கிலத்துடன் சேர்த்து மற்றொரு வெளிநாட்டு மொழியைத் தேர்வு செய்வதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

மொழி பாடங்கள் மட்டுமின்றி, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களிலும் மாணவர்கள் எதிர்பார்க்காத ஒரு புதிய முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. 2026-27 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியலில் 'இரண்டு நிலை' (Two-level system) தேர்வு முறை அமலுக்கு வரும். அனைத்து மாணவர்களும் பொதுவாக 80 மதிப்பெண்களுக்குத் தேர்வு எழுதுவார்கள். ஆனால், அந்த பாடங்களில் கூடுதல் திறமை கொண்ட மாணவர்கள், தங்களின் சிந்திக்கும் திறனை நிரூபிக்க கூடுதலாக 25 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேர 'அட்வான்ஸ்டு' (Advanced) தேர்வை எழுதலாம். இந்த மதிப்பெண்கள் மொத்தக் கணக்கில் சேர்க்கப்படாது என்றாலும், மதிப்பெண் சான்றிதழில் தனியாகக் குறிப்பிடப்படும்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கணினி வழி சிந்தனை (Computational Thinking) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) ஆகிய பாடங்களும் இனி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கப் போகின்றன. 2029-ஆம் ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏஐ (AI) ஒரு கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்பட்டு, அதற்கு வெளிப்புற மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்படும். இது தவிர, தொழிற்கல்வி, கலைக்கல்வி மற்றும் உடற்கல்வி ஆகியவையும் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. சமூக அறிவியல் பாடத்திலும் மனப்பாடம் செய்யும் முறையைத் தவிர்த்து, தரவுகளை ஆய்வு செய்யும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் கூறுகையில், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த நீண்ட காலத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 2028-ஆம் ஆண்டு பொதுத்தேர்வு இரண்டு நாட்களாகவும், 2031-ஆம் ஆண்டு முதல் மூன்று மொழி பாடங்களுக்கும் சேர்த்து மூன்று நாட்களாகவும் தேர்வுகள் நடத்தப்படும். வெளிநாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மட்டும் இரண்டு இந்திய மொழிகள் என்ற விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, ஒரு இந்திய மொழியைத் தேர்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிபிஎஸ்இ மாணவர்களின் படிப்பு முறை முற்றிலும் மாறப்போவது உறுதியாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.