பொழுதுபோக்கு

வெறும் ரூ.22,000 கடன் கேட்டு.. 'கூலி' பட மாஸ் நடிகர் மற்றும் மனைவியின் மொபைல் ஃபோன் ஹேக்!

பிரியங்காவின் செல்போன் ஹேக் செய்யப்பட்டது தெரியாமல், உபேந்திராவும் அதே எண்ணில் இருந்து வந்த செய்தியைப் பார்த்து..

மாலை முரசு செய்தி குழு

பிரபல கன்னட நடிகர், இயக்குநர் உபேந்திரா, சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். அதில், அதிகாலையில் தனது மனைவி பிரியங்காவின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு, அதன் மூலம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பணம் கேட்டுச் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மோசடி நடந்தது எப்படி?

உபேந்திராவின் மனைவி பிரியங்காவுக்கு, 'உங்கள் பழைய மொபைல் எண்ணை செயலிழக்கச் செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்' என்று ஒரு போலி செய்தி வந்தது. அந்த செய்தியைப் பார்த்து, பிரியங்கா தனது வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளீடு செய்தவுடன், அவரது செல்போன் உடனடியாக ஹேக் செய்யப்பட்டது.

அதன்பின், ஹேக் செய்தவர்கள், பிரியங்காவின் செல்போனில் இருந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, 'பணம் தேவைப்படுகிறது, உடனடியாக ரூ.22,000 அனுப்புங்கள்' என்று செய்திகள் அனுப்பியுள்ளனர். பிரியங்காவின் செல்போன் ஹேக் செய்யப்பட்டது தெரியாமல், உபேந்திராவும் அதே எண்ணில் இருந்து வந்த செய்தியைப் பார்த்து, தானே அந்த வலையில் சிக்கிக்கொண்டார்.

உபேந்திராவின் எச்சரிக்கை:

உபேந்திரா இந்த மோசடி குறித்து அறிந்ததும், உடனடியாக ஒரு வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதில், "இன்று காலை, எனது மற்றும் எனது மனைவி பிரியங்காவின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. தயவுசெய்து எனது தொலைபேசி எண்ணில் இருந்து பணம் கேட்டு வரும் எந்த அழைப்பையோ அல்லது செய்தியையோ நம்பாதீர்கள். திரையுலகில் உள்ள எனது நண்பர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் உட்பட அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

போலீசில் புகார்

இந்தச் சம்பவம் தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்வதாகவும் உபேந்திரா தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் உபேந்திராவுக்கு நடந்த இந்தச் சம்பவம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. இதுபோன்ற போலியான செய்திகள் மற்றும் அழைப்புகளுக்கு யாரும் பதிலளிக்கக் கூடாது என்றும், அறிமுகமில்லாத இணைப்புகளை (links) கிளிக் செய்யக்கூடாது என்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.