கலைக்கும் கலைஞர்களுக்கும் எல்லைகள் இருக்கக் கூடாது என்று ஒருபுறம் கூறினாலும், நாட்டின் நலன் என்று வரும்போது மற்ற அனைத்தும் பின்னுக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்தை நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்துள்ள புதிய இணையத் தொடரை நெட்ஃபிளிக்ஸ் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அவர் வெளியிட்டுள்ள கருத்து தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.
'Jo Bachay Hain Sang Samait Lo' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் ஃபவாத் கானுடன் மஹிரா கான் உள்ளிட்ட பாகிஸ்தானின் முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். ஆறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், பாகிஸ்தான் எழுத்தாளர் ஃபர்ஹத் இஷ்தியாக் எழுதிய 2013ஆம் ஆண்டு வெளியான பிரபல உருது நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. மொமினா துரைத் இயக்கி தயாரித்துள்ள இந்தப் படைப்பு, நெட்ஃபிளிக்ஸின் முதல் பாகிஸ்தான் ஒரிஜினல் தொடராக அறிமுகமாக உள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி உலகளவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடரை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கான சாத்தியம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், குஷ்பு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். கலைக்கு நாடு, மொழி போன்ற எல்லைகள் இருக்கக் கூடாது; அது தடையின்றிப் பயணிக்க வேண்டும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதே நேரத்தில் பாகிஸ்தான் தொடரை இந்தியாவில் ஒளிபரப்புவது என்பது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை இந்திய மண்ணில் நடத்துவதற்குச் சமம் என்று ஒப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் நடத்தப்படுவதில்லை என்றால், பாகிஸ்தான் தொடரையும் இங்கு ஒளிபரப்பக் கூடாது என்பது அவரது வாதம். தொடரின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் மீது தனிப்பட்ட மரியாதை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டுப்பற்று அனைத்திற்கும் மேலானது என்றும், இந்தியாவை விட முக்கியமானது எதுவும் இல்லை என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் கருத்து வெளியாகும் முன்பே இந்தத் தொடருக்கு எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அகில இந்திய சினி தொழிலாளர் சங்கம் (AICWA), மேற்கு இந்திய சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பு (FWICE) ஆகிய அமைப்புகள் தொடரை இந்தியாவில் வெளியிடக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தன. FWICE பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதி, இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டது. மேலும், நெட்ஃபிளிக்ஸ் தொடரை வெளியிட்டால் அதன் இந்திய தயாரிப்புப் பணிகளில் ஈடுபடும் தங்களது உறுப்பினர்களைத் திரும்பப் பெறுவோம் என்றும் எச்சரித்துள்ளது.
2025 மே 8ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவுறுத்தலைப் பின்பற்றுமாறு நெட்ஃபிளிக்ஸுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் செயல்படும் ஓடிடி தளங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று அப்போது அறிவுறுத்தப்பட்டிருந்தது. 2025 ஜூன் மாதத்தில் பாகிஸ்தானில் உருவான திரைப்படங்கள் அல்லது தொடர்களை இந்திய சந்தாதாரர்களுக்குக் கிடைக்கச் செய்யவில்லை என்று நெட்ஃபிளிக்ஸ் அரசிடம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது உலகளாவிய வெளியீட்டுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இந்தத் தொடரை ஒளிபரப்புவது தொடர்பாக Netflix இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. அரசின் அறிவுறுத்தல், திரையுலக அமைப்புகளின் எதிர்ப்பு, குஷ்பு சுந்தரின் கருத்து எனப் பல்வேறு அழுத்தங்கள் உருவாகியுள்ளதால், இந்தத் தொடரின் இந்திய வெளியீடு குறித்த கேள்வி தொடர்ந்து நீடிக்கிறது. கலைப் படைப்புகளுக்கு அரசியல் எல்லைகள் இருக்க வேண்டுமா அல்லது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளைப் பொறுத்து கலாச்சாரப் பரிமாற்றங்களுக்கும் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டுமா என்ற விவாதத்தையும் இந்தச் சர்ச்சை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.