பொழுதுபோக்கு

கிராமத்திற்குள் ஒய்யாரமாக நடந்து சென்ற பாகுபலி...!!

Malaimurasu Seithigal TV

மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் அதிகாலையில் காட்டு யானை பாகுபலி கிராமத்திற்குள் புகுந்து சாலையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சமயபுரம்,ஓடந்துரை,குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை பாகுபலியின் நடமாட்டம் கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் தென்பட துவங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த யானை தொடர்ந்து விவசாய நிலங்கள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் இந்த யானையை வனத்துறை பிடித்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

இதனையடுத்து பாகுபலியை பிடித்து அதனை கும்கி யானையாக மாற்ற கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை முயற்சி மேற்கொண்டது. இருப்பினும் யானை பாகுபலி வனத்துறையினர் வலையில் சிக்காமல் தப்பி அடர் வனத்தினுள் சென்றது. இதனால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. அதே சமயத்தில் யானை பாகுபலியும் விவசாய நிலங்களிலோ அல்லது கிராமங்களிலேயோ நுழையாமல் இதுவரை அடர்ந்த வனத்தினுள் மட்டுமே இருந்து வந்தது.


ஆனால், தற்போது பாகுபலி மீண்டும்  குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் புகுந்து நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இன்று அதிகாலை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பிரதான சாலை அமைந்துள்ள சமயபுரம் பகுதி குடியிருப்பு சாலையில் புகுந்துள்ளது. அதிகாலையில் எவ்வித அச்சமும் இன்றி இயல்பான தனது ஒய்யார நடையில் காட்டு யானை பாகுபலி சமயபுரம் சாலையில் நடமாடியதை அடுத்து அந்த கிராம மக்கள் வீடுகளுக்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டனர்

இதுவரை பொதுமக்களை இந்த காட்டு யானை தாக்கியது இல்லை இருப்பினும் அதிகாலை வீட்டின் முன்பு காட்டுயானையை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானை பாகுபலியை அடர் வனத்தினுள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.