தமிழக தொலைக்காட்சி வரலாற்றில் வெகுவாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி பிக் பாஸ். 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு பத்தாவது சீசனை எட்டுகிறது. இதற்காக ஸ்பெஷலான ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த நிகழ்ச்சிக் குழுவினர், Bigg Boss The Common Man என்ற போட்டியைத் தொடங்கியுள்ளனர்.
பிக் பாஸில் சுமார் 17-18 போட்டியாளர்கள் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் வாக்கு அடிப்படையில் ஒருவர் நீக்கப்பட்டு, இறுதிவரை தாக்குப்பிடித்து பார்வையாளர்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
பிக் பாஸில் போட்டியிடுபவருக்கு 100 நாட்கள் தமிழக மக்களின் இல்லங்களிலெல்லாம் தோன்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதனால் பிரபலத்தன்மை கிடைக்கும் என்பது உண்மைதான் என்றாலும், சினிமாவில் அல்லது நிகழ்ச்சிகளில் நிலையான வாய்ப்புகள் கிடைக்கும் என்பது உறுதியில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் எவருக்கும் அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுவது இயல்பு. அந்த ஆசையை நிறைவேற்றும் வாய்ப்புதான் பிக் பாஸ் தி காமன் மேன்.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தப் போட்டிக்காக ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் மக்களை மகிழ்விக்கும் தகுதி உடையவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேர் பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை நகைச்சுவையாளர் மாயா தொகுத்து வழங்குகிறார்.
போட்டியாளர் தேர்வில் பல சார்புகள் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களைக் கொண்ட செலபிரிட்டிகள் காமன் மேன் போட்டியில் பங்கேற்பது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
காமன் மேன் நிகழ்ச்சியின் முதல் போட்டியாக, 50 போட்டியாளர்களும் ஒரு பேருந்தில் முண்டியடித்து ஏறி, தானாக வெளியேறும் வரை அமர வைக்கப்பட்டனர்.
குறைந்த இருக்கைகள் உள்ள பேருந்தில் ஏறி அமர போட்டியாளர்கள் சண்டையிட்டுக்கொண்டனர். பின்னர் அவர்கள் காற்று வராத இருண்ட பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வியர்வையில் குளித்தும் யாரும் பேருந்தை விட்டு இறங்காததால், அனைவரும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
அடுத்த சுற்றில் கொஞ்சம் நாற்காலிகளைப் போட்டு, அதில் அமருவதுதான் போட்டி என அறிவித்தார்கள். நாற்காலிக்காக போட்டியாளர்கள் மீண்டும் அடித்துக்கொள்ளத் தொடங்கினர். போட்டியாளர்கள் சிலர் சீரியஸாகச் சண்டையிடவும் செய்துள்ளனர்.
இந்த இரண்டு போட்டிகளும்தான் தற்போது மக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது.
ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்படுபவர்களின் சண்டைகளையும், மன ஓட்டங்களையும், உரையாடல்களையும் அப்பட்டமாக ஒளிபரப்புவது சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பல விவாதங்கள் இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில், பிக் பாஸ் தி காமன் மேன் சாமானியர்களின் சுய மதிப்பீட்டைக் கேள்விக்கு உட்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த முதல் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்பாளர்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்து, "செலபிரிட்டியாக இருந்தால் ஒரு நிகழ்ச்சிக்கு இப்படித்தான் தேர்ந்தெடுப்பார்களா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பாளர்களின் ஏழ்மை, குடும்பச் சச்சரவுகள், சமூகப் பின்னணி ஆகியவை டி.ஆர்.பி-யை ஏற்றும் காரணிகளாக அணுகப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
உதாரணமாக, உலகிலேயே அதிக சந்தாதாரர்களைக் கொண்ட மிஸ்டர் பீஸ்ட் என்பவரின் சேனலில் ஏழையாக இருப்பவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்க போட்டிகள் நடைபெறுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஒருவரிடம் ஏதோ ஒன்று (பொதுவாக பணம்) இல்லை என்பதற்காக குறைபட்டுக்கொள்வதையும், அதை வழங்க போட்டிகள் நடத்தி கண்டு களிப்பதையும் "poverty porn" என்பர். இது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக, அவர்களைப் போன்ற எல்லா சாமானியர்களும் தங்களது சுயமரியாதையையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கும் பழக்கம் ஏற்படும்.
அதேபோல, இந்த பிக் பாஸ் தி காமன் மேன் போட்டி பிரபலமின்மையைச் சாமானியர்களுக்கு எதிரான கருவியாக்கி, அவர்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கி, காட்சிப்பொருளாக மாற்றுவதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சமூக வலைத்தளக் காலகட்டத்தில் பிரபலமாக இருப்பதற்கான போட்டி ஒவ்வொரு நபரிடமும் இருப்பதைப் பயன்படுத்தி, தொலைக்காட்சி நிறுவனங்கள் இத்தகைய சுரண்டலில் ஈடுபடுகின்றன.
பிரபலத்துவம் என்பது ஏதோ ஒரு துறையில் முழுமனதாகச் செயல்பட்டு வெற்றி அடைவதனால் கிடைக்கும் புகழ் வெளிச்சம் என்பதைத்தாண்டி, ஏதோ ஒரு வகையில் பிரபலமாக இருப்பதையே குறிக்கோளாக மாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் எவ்வளவோ கடினமான போட்டிகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் சாமானியர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக ஒரு நிகழ்ச்சியை நடத்தம்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதற்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
நிகழ்ச்சியை பார்க்கும் கோடிக்கணக்கான மக்களும் சாமானியர்கள்தான் என்னும்போது, நேரடியாக உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சுரண்டும் போட்டிகளை நடத்துவது எந்த வகையான முன்னுதாரணமாக அமையும்?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்கள் அத்தனையையும் பார்த்த மக்கள், "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கண்ணியமான போட்டிகளை நடத்தக் கூடாதா?" என்ற கேள்வியையே எழுப்பியுள்ளனர்.
மொத்தம் 22 எபிசோடுகள் செல்லலாம் என எதிர்பார்க்கப்படும் பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சி இனியாவது கண்ணியமான முறையில் நடக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்