Shakeel Noorani Bollywood Director 
பொழுதுபோக்கு

“பட வாய்ப்பு தருகிறேன் என அழைத்து கொடூரம்” - பலமுறை கொடுக்கப்பட்ட கருச்சிதைவு மாத்திரைகள்.. பாலிவுட் இயக்குனர் அதிரடி கைது!

40 நாட்கள் தலைமறைவாக இருந்த 73 வயது இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்...

Mahalakshmi Somasundaram

திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி 33 வயது நடிகையை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்-இயக்குநர் 73 வயதுடைய சகீல் நூரானி. 40 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், நூரானி தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட வாய்ப்பு என அழைத்து பாலியல் வன்கொடுமை?

‘Bade Dilwala’ (1999), ‘Joru Ka Ghulam’ (2000) உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து, இயக்கியவர் சகீல் நூரானி. கடந்த 2016-ம் ஆண்டு லோகண்ட்வாலாவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் நூரானியை முதன்முதலில் சந்தித்ததாக 33 வயது நடிகை தனது புகாரில் தெரிவித்துள்ளார். அப்போது, திரைப்படம் தொடர்பான வேலை வாய்ப்புக்காக தன்னை தொடர்பு கொள்ளுமாறு அவர் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, திரைப்படத்தின் கதையை படித்துப் பேசுவதற்காக மால்வானியில் உள்ள தனது வீட்டிற்கு நடிகையை நூரானி கடந்த 2022 ஆம் ஆண்டு அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு பானம் ஒன்றை வழங்கியதாகவும், அதை குடித்த பின்னர் தான் மயக்கமடைந்ததாகவும் நடிகை தனது புகாரில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வீடியோவை காட்டி மிரட்டல்?

மேலும், அந்த சம்பவத்தை நூரானி வீடியோவாக பதிவு செய்ததாகவும், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தாலோ அல்லது குடும்பத்தினரிடம் தெரிவித்தாலோ அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த வீடியோவை பயன்படுத்தி தன்னை தொடர்ந்து மிரட்டி, பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாலியல் சம்பவங்களுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தடுப்பதற்காக தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள் வழங்கியதாகவும் நடிகை குற்றம்சாட்டியுள்ளார். இருப்பினும் சில முறைகள் கர்ப்பம் ஏற்பட்ட நிலையில் வலுக்கட்டயமாக மாத்திரை கொடுத்து கருச்சிதைவு ஏற்படுத்தியதாகவும் அவர் புகார் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-ல் மீண்டும் மும்பை வந்த நடிகை புகார்

இதனால் அச்சமடைந்த நடிகை புகைரளிக்காமல் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி தேவைப்பட்ட நிலையில் மீண்டும் மும்பைக்கு வந்த நிலையில், அவர் தனக்கு நடந்த பாலியல் குற்றங்கள் பற்றி காவல்துறையை அணுகி புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் மால்வானி போலீசார் வழக்குப்பதிவு செய்து நூரானியை தேடி வந்த நிலையில், அவர் சுமார் 40 நாட்களாக தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

சதாரா பண்ணை வீட்டில் சிக்கிய இயக்குநர்

நூரானி சதாரா மாவட்டத்தில் உள்ள மேதா/மகாபலேஷ்வர் பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற மால்வானி போலீசார், ஆகஸ்ட் 8-ம் தேதி அதிகாலை அவரை கைது செய்தனர். பின்னர் மும்பைக்கு அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 64(2)(M), 123, 351(2), 88 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், இதுபோன்ற சம்பவங்கள் வேறு இடங்களிலும் நடந்துள்ளதா என்பதையும் விசாரிக்க போலீஸ் காவல் கோரப்பட்டது.

ஆகஸ்ட் 12 வரை போலீஸ் காவல்

இதையடுத்து போரிவலி விடுமுறை நீதிமன்றம், சகீல் நூரானியை ஆகஸ்ட் 12-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. தற்போது நடிகை அளித்துள்ள புகார், மருத்துவம் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சகீல் நூரானி மீதான குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர் மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, நடிகை கூறியுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் போலீசார் சேகரிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும். சினிமா வாய்ப்பு என்ற பெயரில் தொடங்கிய தொடர்பு, பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டாக மாறி, 40 நாட்கள் தலைமறைவாக இருந்த 73 வயது இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்