பொழுதுபோக்கு

தயவு செய்து இப்படி விளம்பர படுத்தாதீர்கள்!- படக்குழுவிற்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை!

பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தை ‘பி.எஸ்’ என விளம்பரப்படுத்த வேண்டாம் என படக்குழுவினருக்கு கோவையை சேர்ந்த வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Malaimurasu Seithigal TV

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை, அதே பெயரில் இயக்குனர்  மணிரத்னம், திரைப்படமாக இயக்கியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் நாளை வெளியாக உள்ளது.

இந்த படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது முதல் பொன்னியின் செல்வன் முதல் பாகம் என்பதை பி.எஸ். 1 என படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனமும், படக்குழுவினரும் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் பெயரை பி.எஸ். 1 என விளம்பரப்படுத்தக் கூடாது என கூறி , கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர்கள் என்.சுந்தரவடிவேலு எம்.லோகநாதன் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அதில், பெற்றோருடன் படகில் சென்ற அருண்மொழி வர்மன் பொன்னி நதியில் விழுந்த போது பெண் ஒருவர்  காப்பாற்றியதாகவும், பொன்னி நதியே அவரை காப்பாற்றியதாக கூறும் வகையிலேயே பொன்னியின் செல்வன் என அவருக்கு பெயர் சூட்டப்பட்டதாகவும், அதையே நாவலுக்கும் சூட்டப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் பொன்னியின் செல்வன் என்ற பெயரை பி.எஸ். என சுருக்குவது தவறு எனவும், பி.எஸ். என்பது ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிறிஸ்துவ கூட்டமைப்பை குறிக்கும் வார்த்தை எனவும், வரலாற்று சிறப்பு மிக்க கதை தலைப்பை பி.எஸ். சுருக்குவது மத ரீதியிலான போரை குறிப்பது போல் ஆகிவிடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நோட்டீஸ் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குனர் மணிரத்னம், நடிகர் விக்ரம், வினியோகஸ்தர் ரெட் ஜெயண்ட் மூவி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.