பொழுதுபோக்கு

தனுஷ் மற்றும் யுவன் குரலில் வெளியான நானே வருவேன் படத்தின் இரண்டாவது சிங்கிள்..!

Malaimurasu Seithigal TV

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான 'ரெண்டு ராஜா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

நடிகர் தனுஷ் முன்னதாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் நல்ல வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ், அடுத்ததாக நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ளார். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷுடன், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, எல்லி அவுரம் என்ற சுவீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், திரைப்படமானது வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது, மேலும் இந்த படத்திற்கு சென்சார் போர்ட் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'வீரா சூரா' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பப்பை பெற்றது. 

இந்நிலையில், இன்று செகண்ட் சிங்கிள் பாடலான 'ரெண்டு ராஜா' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனுஷும், யுவனும் சேர்ந்து பாடியுள்ளனர். இந்த பாடல் வரிகளையும் தனுஷ் எழுதியுள்ளார். இந்த பாடல் வெளியான ஒரு மணி நேரத்திலேயே, ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. படத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.