பொழுதுபோக்கு

ரெளடி பிக்சர்ஸ் என பெயர் வைப்பதா? விக்னேஷ் சிவன் - நயன்தாரா மீது போலீசில் புகார்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்துள்ளது. 

Tamil Selvi Selvakumar

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய நிறுவனம் தான் ரெளடி பிக்சர்ஸ். மேலும் இந்த நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை தயாரித்தும் உள்ளனர். அதில் ஒரு சில திரைப்படங்கள் விருதுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா தொடங்கிய நிறுவனத்திற்கு ரெளடி பிக்சர்ஸ் என்ற பெயர் வைத்திருப்பதற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ரெளடி பிக்சர்ஸ் என பெயர் வைப்பதா? என்றும், ஏற்கனவே ரெளடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இது ரெளடிகளை ஊக்கப்படுத்துவது போன்று உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பெயருக்கு காரணம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடி தான்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இருவரும் இணைந்து ஆரம்பித்த நிறுவனத்திற்கு ரெளடி பிக்சர்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டதாக இருவரும் தகவல் தெரிவித்தனர்.  அதேசமயம் இந்நிறுவனம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது புகார் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.