"முத்தம் கொடுத்த பிறகு என்ன?.." சர்ச்சை கேள்வி; “நாயும் பன்றியும் கூட குட்டி போடும்!” கொந்தளித்த கார்த்திக் சுப்புராஜ்! 
பொழுதுபோக்கு

"முத்தத்துக்கு பிறகு என்ன செய்வாங்க?.." சர்ச்சை கேள்வி; “நாயும் பன்னியும் கூடதான் குட்டி போடும்!” கொந்தளித்த கார்த்திக் சுப்புராஜ்!

விவாதத்தில் கலந்து கொண்ட திருநங்கை ஒருவரை நோக்கி, "இருவரும் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறாங்க..?" எனக் கேள்வி எழுப்பினார்.

மாலை முரசு செய்தி குழு

சமீபத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடம் சர்ப்ரைஸ் வெற்றியைப் பெற்ற திரைப்படம் டோரதி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான இந்தப் படம், ஆணாதிக்க சமூகத்தின் வன்முறைகளுக்கு இடையில் ஒரு திருநங்கையின் பயணம் குறித்துப் பேசியது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது டோரதி. அதே நேரத்தில், சிலர் எதிர்மறையான கருத்துகளையும் முன்வைத்துள்ளனர்.

இந்தப் படம் குறித்து ஒரு தனியார் ஊடகம் நடத்திய உரையாடலில், பழைய வண்ணாரப்பேட்டை, பகாசூரன், திரௌபதி ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி வெளிப்படுத்திய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

குறிப்பாக, விவாதத்தில் கலந்து கொண்ட திருநங்கை ஒருவரை நோக்கி, "இருவரும் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறாங்க..?" எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

"இந்தப் படம் வெற்றிபெறக் கூடாது என சிலர் நினைத்தனர்"

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், "இந்தப் படத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்த ஒரு குழுவினர் முயன்றனர். திருநங்கைகளைப் பற்றி பேசும் வெகுஜன படத்தை வெற்றியடைய வைக்கக் கூடாது என்பதில் ஒரு பிரிவினர் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஆனால், அதைத் தாண்டி படம் வென்றுவிட்டது. அவர்களை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை..." என்றார்.

DOROTHY

"வன்மையான கண்டனங்கள்!"

தொடர்ந்து பேசிய அவர், "மோகன் ஜி என்ற இயக்குநர் அந்த அக்காவிடம், “கல்யாணம் பண்ணி நீங்க என்ன பண்ணப் போறீங்க? கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் என்ன ஆகப்போகுது?” என்று கேட்கிறார். அதற்கு அந்த அக்கா மிகத் தெளிவாக, “ஒரு பையன் ஒரு திருநங்கையைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டால், இருவரும் அன்பைப் பகிர்ந்துகொண்டு சந்தோஷமாக வாழப்போகிறார்கள்” என்று விளக்குகிறார்.

ஆனால் அவர் திரும்பத் திரும்ப அதே கேள்வியை வலியுறுத்தி, இறுதியாக “உங்களால் இயல்பாக உடலுறவு வைத்து ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாது அல்லவா?” என்ற புள்ளிக்கு வருகிறார். அது கேள்விகூடக் கிடையாது. ஒரு பயங்கரமான அவமானம் (இன்சல்ட்). அதை அவர்களின் முகத்திற்கு நேராகவே ஒரு தொலைக்காட்சி அல்லது யூடியூப் தளத்தில் முன்வைக்கிறார்.

அனைவரையும் சமமாக மனிதர்களாகப் பாருங்கள் என்றுதான் நாம் கூறுகிறோம். ஆனால் அதையும் மீறி ஒரு பொதுத் தளத்தில் இவ்வளவு திருநங்கை எதிர்ப்புக் கருத்துக்களைப் பேச முடிகிறது என்றால், அது அந்தத் திருநங்கை அக்கா மீது நடத்தப்பட்ட அப்பட்டமான உளவியல் ரீதியான தாக்குதலாகும். இயக்குநர் மோகன்.ஜியின் இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்." என்றார்.

"நாயும் பன்னியும் கூடதான் குட்டி போடுது"

மேலும் பேசிய கார்த்திக், "நீங்கள் படத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் மனிதநேயம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? திருமணம் என்றால் உடலுறவு வைத்துக் குழந்தை பெற்றுக்கொள்வது மட்டும்தான் மனித வாழ்க்கையின் இலக்கா? அதை நாயும் பன்றியும் கூடச் செய்கிறது, குட்டி போடுகிறது. அதுதான் மனிதர்களுக்கான இறுதி இலக்கா?

டோரதி குழு

அவர்கள் “நாங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்டு சந்தோஷமாக வாழ்வோம்” என்று சொல்லும்போது, “உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது” என்று கேட்கிறீர்கள். இயல்பான ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ கூடப் பல சிக்கல்களால் குழந்தை பிறக்காமல் போகலாம். அதற்காக அவர்கள் வாழத் தகுதியில்லாதவர்களா அல்லது ஒன்றாகச் சந்தோஷமாக இருக்கத் தகுதியில்லாதவர்களா? இது மிகவும் கொடூரமான திருநங்கை எதிர்ப்பு உரையாடலாகும்.

ஒரு மத ரீதியாகவோ சாதி ரீதியாகவோ தவறான கருத்துக்களைப் பேசினால் எப்படிச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பார்களோ, அதேபோல பாலினப் பாகுபாட்டோடு பேசி ஒருவரை உளவியல் ரீதியாகத் தாக்கி அவமானப்படுத்துவதற்கும் நடவடிக்கை கொண்டுவர வேண்டும்.

ஒருவரால் இவ்வளவு பகிரங்கமாக இத்தகைய கருத்துக்களைப் பேச முடிவதையும், அதை நாம் கடந்து போவதையும் நினைத்தால் வேதனையாக இருக்கிறது. எனவே, அவ்வாறு பேசிய நபரை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். இனிமேல் இப்படிப் பேசாதீர்கள். மற்றவர்களையும் பேச அனுமதிக்காதீர்கள்.

ஏனெனில் எதிரில் இருப்பவரும் ஒரு மனிதர்தான். ஒரு மனிதராக மதித்து, தொலைக்காட்சி நேரலையில் அவர்களைக் காயப்படுத்துவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை." எனப் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்