பொழுதுபோக்கு

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது..!

Tamil Selvi Selvakumar

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட, இந்து முன்னணி நிர்வாகியும், பிரபல சண்டைப்பயிற்சியாளருமான கனல்கண்ணன் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன்:

இந்தியத் திரைப்படத்துறையில் சண்டை ஒருங்கிணைப்பாளராகவும், சண்டை பயிற்சியாளராகவும் அறியப்படுபவர் கண்ணன் என்கிற கனல் கண்ணன். ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார். அத்துடன்  இந்து முன்னணியின் மாநில கலை இலக்கியச் செயலாளராகவும் உள்ளார்.

சர்ச்சை பேச்சு:

சென்னை மதுரவாயலில் கடந்த ஒன்றாம் தேதி, இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயண நிறைவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கலந்து கொண்டார். அப்போது பேசிய இந்து முன்னணியின் மாநில கலை இலக்கியச் செயலாளர் கனல் கண்ணன், ”ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்ன ஈ. வெ. ராவின் சிலை இருப்பதாகவும், அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்றும் கூறியிருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

புகார் அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகம்:

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது, மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பாத கூறி  பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே கனல் கண்ணன், பெரியார் குறித்து அவதூறாக பேசும் விடியோ காட்சி, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அளித்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

தலைமறைவான கனல் கண்ணன்:

கனல் கண்ணன் மீது தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் தேடுவதை அறிந்து கனல் கண்ணன் தலைமறைவானார்.  இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, கனல்கண்ணன் தொடர்ந்த முன் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கைதான கனல் கண்ணன்:

இந்நிலையில், தலைமறைவான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் புதுச்சேரிக்கு  அவரை தேடி சென்றனர். இதனையடுத்து, 76 வது சுதந்திர தினவிழாவையொட்டி இன்று புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல்கண்ணனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.