பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில், தன் அனுமதியில்லாமல், இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடையை நீக்கக் கோரி மனுத்தாக்கல் செய்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், குட் பேட் அக்லி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் உரிமையை, சோனி நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்தியதாகவும், தற்போது இளையராஜா பாடல்களை குட் பேட் அக்லி திரைப்படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி சோனி நிறுவனம் சார்பில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி, என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் ஏ. சரவணன் ஆஜராகி, திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து பாடல் உரிமையை வாங்கியதாக கூறுகிறார்கள் என்றும், தயாரிப்பாளர்களுக்கு பாடல் உரிமையை எப்போதும் இளையராஜா வழங்கியது கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார்..
பதிப்புரிமை சட்டப்படி இசையமைப்பாளர்களிடம் தான் பாடல் உரிமை உள்ளது என்றும் ஒட்டுமொத்த படத்திற்கு தயாரிப்பாளருக்கு உரிமை இருந்தாலும், பாடல்களை தனியாக எடுத்து மூன்றாம் நபருக்கு விற்க தயாரிப்பாளருக்கு உரிமை இல்லை என்றும் வாதிட்டார். இதைக் பதிப்புரிமை சட்டம் தெளிவுபடுத்துவதாகவும், பதிப்புரிமை சட்டத்துக்கு எதிராக ஒரு பாடலை மாற்றியோ, உருமாற்றியோ இசையமைப்பாளர் அனுமதி இல்லாமல் வெளியிடுவது அவருடைய நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் ஊரு விளைவிக்கும் செயல் என்றும் வாதிட்டார்.
இந்தப் படத்தில் மூன்று பாடங்களை உருமாற்றம் செய்யப்பட்டதாக வாதிட்ட அவர், மியூசிக்கல் வொர்க்(Musical work) என்பதற்கு பதிப்புரிமை சட்டம் அளித்த விளக்கத்தையும் சுட்டி காட்டினார்.
பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் டி வி.பாலசுப்ரமணிய ஆஜராகி, தயாரிப்பாளர்களிடம் தான் முழு உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார். இளையராஜாவிடம் இசை உரிமை இருந்தால் அதை அவர் தான் நிரூபிக்க வேண்டும் எனவும் வாதிட்டார். அதேபோல டபில்யூ எல் இசை நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். வேல்முருகன் தாங்கள் தான் பாடல்களை விற்றதாகவும் தங்களுக்கு பாடல்களின் உரிமையை கடந்த 2008 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் வழங்கியதாகவும் அதன் அடிப்படையில் பாடல் பயன்படுத்தப்பட்டதாகவும் வாதிட்டார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.