பொழுதுபோக்கு

ஜனநாயகன் லீக் வழக்கில் திருப்பம்: “நான் சினிமா எடிட்டர் இல்லை” - துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

அப்போது, மனுதாரர் “பிரபல துணிக்கடையில் மேலாளராக பணியாற்றுகிறார்,

Muthu Lakshmi

ஜனநாயகன் திரைப்படம் இன்னும் சென்சார் சான்றிதழ் பெறாத காரணத்தால் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி அந்த முழு படம் சட்டவிரோதமாக சமூக வலைதளங்களில் வெளியானது. விஜய்யின் ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்த நேரம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக இருந்த நிலையில் இந்த சம்பவம் பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியது. பல்வேறு குற்றச் சாட்டுகளும் எழுந்தது. அதனையடுத்து ஏப்ரல் 12ம் தேதி 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.

தணிக்கை குழுவின் மறு ஆய்வில் உள்ள ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக வெளியானதையடுத்து கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் அசோக் நகர் போலீசில் புகார் செய்திருந்தனர். 

இணையத்தில் வெளியான திரைப்படத்தில் இருந்த எடிட்டிங் வாட்டர் மார்க் அடிப்படையில், படம் எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்து கசிந்திருக்கும் என விசாரணையில் சந்தேகித்த காவல்துறை விசாரணை தொடங்கியதாக தெரிவித்தது. மேலும், இந்த படத்திற்காக தினமும் சுமார் 500 பேர், 145 நாட்களுக்கு மேலாக உழைத்துள்ளனர் என்பதால், அவர்களின் உழைப்பை கருத்தில் கொண்டு “மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம்” என்றும் போலீசார் வலியுறுத்தினர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த ஃப்ரீலான்சர் எடிட்டர் உமாசங்கர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் “பிரபல துணிக்கடையில் மேலாளராக பணியாற்றுகிறார், தவிர சினிமா எடிட்டர் இல்லை; இதற்காக யாரிடமும் எந்த தொகையையும் பெறவில்லை” என உமாசங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் என்பவர் தான் இந்த படத்தை நகலெடுத்து, துணிக்கடையில் வேலை பார்க்கும் தனது சகோதரருக்கு  (மனுதாரருக்கு) அனுப்பியுள்ளார்; பின்னர் மனுதாரர் பதிவேற்றம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.மேலும் “எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்துதான் விஜயின் ஜனநாயகன் வெளியாகியுள்ளது. பிரசாந்த் என்பவர் தனது லேப்டாப்பில் படத்தை திருட்டுத்தனமாக ஏற்றிய பின் மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார்” என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த தீவிர விசாரணை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.