tamil cinema legent bhagyaraj  
பொழுதுபோக்கு

EXCLUSIVE: ‘சுவரில்லாத சித்திரங்கள் முதல் சின்ன வீடு வரை’ - திரைக்கதை மன்னன் பாக்யராஜின் என்றும் அழியாத ஐந்து காவியங்கள்!

ஆனால் திருமணத்திற்கு பிறகு காதலியை நாகரீகம் கருதி ஏற்க மறுக்கும் காதலன் என படத்தின் மைய கருத்து...

Mahalakshmi Somasundaram

தமிழ் சினிமாவில் நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வு, சமூக கருத்து ஆகிய அனைத்தையும் ஒரே கதையில் கலக்கக்கூடிய அபூர்வமான படைப்பாளிகளில் முன்னணியில் இருந்த ஒருவர் கே. பாக்யராஜ். சாதாரண மக்களின் வாழ்க்கையில் நடைபெறும் சிறு சம்பவங்களை சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றி ரசிகர்களின் மனதில் “திரைக்கதை மன்னன்” என தனி இடம் பிடித்தவர். அவர் எழுதி, இயக்கி, நடித்த பல திரைப்படங்கள் இன்றும் காலத்தால் அழியாத படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவரது பயணத்தில் மறக்கமுடியாத இன்றளவு புதுமையான படைப்புகளாக இருக்கும் ஐந்து படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காண்போம்.

அந்த 7 நாட்கள் (1981)

பாக்யராஜின் திரைக்கதை திறமையை உலகிற்கு உணர்த்திய முக்கியமான படங்களில் ஒன்று 'அந்த 7 நாட்கள்'. திருமணமான ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏழு நாட்களில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம், காதல், தியாகம், குடும்ப பொறுப்பு மற்றும் மனித உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தியது.குறுகிய கால இடைவெளியில் முழுமையான உணர்ச்சிகரமான கதையை நகர்த்திய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்ந்த திரைக்கதை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது.

திருமணத்திற்கு பிறகும் தனது காதலனுடன் சேர விரும்பும் பெண்ணும் அதற்கு துணையாக இருக்கும் கணவரும், ஆனால் திருமணத்திற்கு பிறகு காதலியை நாகரீகம் கருதி ஏற்க மறுக்கும் காதலன் என படத்தின் மைய கருத்து அன்றை காலகட்டத்தில் காதல் மற்றும் திருமணம் குறித்து கேள்விகளை மக்கள் மனதில் ஆழமாக ஏற்படுத்தியது. இப்போதும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் “என் காதலி உங்க மனைவி ஆக முடியும், ஆனால் உங்கள் மனைவி என் காதலி ஆகமுடியாது” என்ற வசனம் இந்த படத்தில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று போய் நாளை வா (1981)

1981 ஆம் ஆண்டு வெளியான 'இன்று போய் நாளை வா' திரைப்படம், கே. பாக்யராஜின் நகைச்சுவை திரைக்கதை திறமையை வெளிப்படுத்திய முக்கியமான படைப்புகளில் ஒன்றாகும். காதல், நட்பு மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் சித்தரித்த இந்தப் படம், வெளியான காலத்திலேயே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கதையின் மையமாக, ஒரே பகுதியில் வசிக்கும் மூன்று இளைஞர்கள், புதிதாக குடியேறும் ஒரு இளம் பெண்ணை காதலிக்கத் தொடங்குகின்றனர்.

அந்தப் பெண்ணின் மனதை வெல்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், ஒருவரை ஒருவர் முந்திச் செல்லும் போட்டி, தொடர்ந்து நிகழும் நகைச்சுவையான சம்பவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு திரைக்கதை நகர்கிறது. சாதாரண காதல் கதையை வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன், வேகமான காட்சிகளும் இயல்பான வசனங்களும் கொண்டு சுவாரஸ்யமாக உருவாக்கியிருந்தார் பாக்யராஜ். எந்த இடத்திலும் நகைச்சுவை குறையாமல், அதே நேரத்தில் கதையின் ஓட்டமும் சிதையாமல் நகர்ந்தது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது.

முந்தானை முடிச்சி (1983)

பாக்யராஜின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வர்த்தக வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் முதன்மையானது 'முந்தானை முடிச்சி'. கிராமப்புறத்தை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தப் படம், ஒரு இளம் விதவை ஆசிரியரை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கும் பெண்ணின் கதையை நகைச்சுவையுடனும் உணர்ச்சியுடனும் சொல்லியது. கதாநாயகிய நடித்த ஊர்வசி பாக்கியராஜ் மீது பழி சுமத்தும் அந்த கட்சியை மிகவும் நுணுக்கமாக கையாண்டு மகளிர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார்.

இந்த திரைப்படத்தில் பாக்யராஜ் கிராமத்து வாழ்க்கை, குடும்ப உறவுகள், காதல், பெண்களின் மனநிலை மற்றும் சமூக பார்வைகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார். படத்தின் வசனங்கள், நகைச்சுவை காட்சிகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் காரணமாக இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படமாக அமைந்தது.

சின்ன வீடு (1985)

குடும்ப வாழ்க்கை, தம்பதியரின் உறவு மற்றும் வெளிப்புற அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மனிதர்களை மதிப்பிடக் கூடாது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சின்ன வீடு'. இந்த திரைப்படத்தில் அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் கனவில் வாழும் கதாநாயகன் பாக்யராஜ் பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக சற்று பருமனாக இருக்கும் கதாநாகியை திருமணம் செய்து கொள்வார். ஆனால் அவருடன் எந்த வித உறவு வைத்துக் கொள்ளாத நாயகன் வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளவர்.

அப்போது கதாநாயகனை யாரும் நம்பாத சூழலில் மனைவி நம்பி அந்த சிக்கலில் இருந்து வெளியே கொண்டுவருவார். இந்த திரைப்படம் அன்றைய ஆண்களிடம் திருமணத்திற்கு முன் மனைவி மீதான எதிர்பார்ப்பை முற்றிலும் மாற்றிய ஒரு திரைப்படமாக அமைந்திருந்தது. மேலும் திருமண வாழ்க்கையில் ஏற்படும் மனக்கசப்புகள், தவறான ஆசைகள் மற்றும் அதன் விளைவுகளை நகைச்சுவையுடன் எடுத்துரைத்த இந்தப் படம், குடும்ப ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சுவரில்லாத சித்திரங்கள் (1979)

இயக்குநராக பாக்யராஜை தனித்துவமாக அடையாளப்படுத்திய ஆரம்பகால திரைப்படங்களில் முக்கியமானது 'சுவரில்லாத சித்திரங்கள்'. மனித உறவுகள், காதல், வறுமை, குடும்ப பொறுப்பு மற்றும் சமூக சூழ்நிலைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக சித்தரித்த படம் இது. குடும்ப சூழ்நிலை மற்றும் தனது வெகுளித்தனத்தால் காதலில் ஏமாற்றமடையும் ஒரு கதாநாயகனாக பாக்கியராஜ் ஒரு நடுத்தர குடும்ப இளைஞரின் வாழ்க்கையை அப்படியே கண்முன்னே கொண்டு வந்திருப்பார்

வணிக அம்சங்களுடன் கலைநயத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இயல்பான வசனங்கள், வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் யதார்த்தமான திரைக்கதை ஆகியவை பாக்யராஜின் எழுத்து திறனை வெளிப்படுத்தின.

தமிழ் சினிமாவில் அழியாத முத்திரை

பாக்யராஜின் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல; மனித உறவுகள், குடும்ப மதிப்புகள், காதல், நகைச்சுவை மற்றும் சமூக சிந்தனைகளை எளிமையான மொழியில் ரசிகர்களிடம் கொண்டு சென்ற படைப்புகளாகும். திரைக்கதை எழுதும் கலையில் அவர் உருவாக்கிய தனித்துவமான பாணி, இன்றளவும் பல இயக்குநர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்திருந்தாலும் அவர் படைத்த கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் “திரைக்கதை மன்னன்” என்ற மாபெரும் கலைஞரை தமிழ் சினிமா வரலாறு பேசிக்கொண்டே இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.