ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வெளியான ஒரு விளம்பரத்தில், நடிகை கிருதி சனோன் அணிந்திருந்த வெஸ்டோ இண்டியன் உடை குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்தன. ரக்ஷாபந்தன் சகோதர - சகோதரி உறவை கொண்டாடும் ஒரு இந்திய பாரம்பரிய பண்டிகை என்றும் அதற்கு இந்த உடை பொருந்தவில்லை என்றும் விவாதங்கள் எழுந்தன. அதையடுத்து நடிகையும் பாஜக பிரமுகருமான கங்கனா ரனாவத், இது குறித்து கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.
ரக்ஷா பந்தன் பண்டிகையை மையக்கருவாக கொண்டு வெளியான இந்த விளம்பரத்தில் கிருதி சனோன் அணிந்திருந்த உடை குறித்து சிலர் வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். இந்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, விவகாரம் திரையுலகையும் சென்றடைந்தது.
இந்த சூழலில் கங்கனா ரனாவத் தனது சமூக வலைதள பதிவின் மூலம் “ரக்ஷா பந்தன் போன்ற பாரம்பரிய நிகழ்வில் பல்வேறு வகையான உடைகள் இருக்கும் நிலையில், அந்த குறிப்பிட்ட தோற்றத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்” என்ற கேள்வி எழுப்பினார். விளம்பரம் திட்டமிட்டே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது போல் இருப்பதாகவும்” குறிப்பிட்டார். கங்கனா ரனாவத்தின் இந்த பதிவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பரவத் தொடங்கின. மேலும் கங்கனாவின் இந்த விமர்சனத்திற்கு கிருதி சனோனும் பதிலளித்திருந்தார். அதில் “ஒரு பெண் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை தொடர்ந்து சமூகமே தீர்மானிக்க முயற்சிப்பது ஏன்?” என்ற கேள்வியை முன்வைத்தார். பண்டிகைகளின் உண்மையான அர்த்தம் ஒருவர் அணியும் ஆடையில் மட்டும் இல்லை என்றும், அந்த பண்டிகையுடன் தொடர்புடைய உணர்வுகள் மற்றும் உறவுகளில் தான் அதன் முக்கியத்துவம் இருப்பதாகவும் கிருதி குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் இந்த விவாதம் தொடர்ந்து வரும் நிலையில், கங்கனா ரனாவத் கடந்த காலங்களில் மேற்கத்திய உடைகளை அணிந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையவாசிகள் தற்போது மீண்டும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, கிருதி சனோன் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோரின் தேசிய திரைப்பட விருது விழா தோற்றங்களை ஒப்பிட்டு வெளியிடப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ‘மிமி’ (2021) திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றபோது, கிருதி சனோன் புடவை அணிந்து விருது பெற்றதை அந்தக் காணொலி சுட்டிக்காட்டுகிறது.
அதேநேரம், 2015ஆம் ஆண்டு வெளியான ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை கங்கனா ரனாவத் பெற்றபோது, அவர் தோள்பட்டை இல்லாத கவுன் அணிந்திருந்தார். அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து கங்கனா விருது பெறும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன.
இதனுடன், தேசிய திரைப்பட விருதுகளை புடவை அணிந்து பெற்ற பல்வேறு நடிகர்களின் பழைய காணொலிகளும் பகிரப்பட்டு வருகின்றன. கங்கனாவின் ஆடைத் தேர்வை விமர்சிப்பதைவிட, அவர் கடந்த காலங்களில் மேற்கத்திய உடைகளில் தோன்றியிருக்கும் நிலையில், தற்போது கிருதியின் ஆடை குறித்து தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகளையே இணையவாசிகள் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.
கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பெண்களுக்கு தற்போது பல்வேறு வகையான ஆடைகளைத் தேர்வு செய்யும் சுதந்திரம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. காக்டெய்ல் உடைகள் முதல் லெஹங்கா சோலி, ஜீன்ஸ் முதல் புடவை, பிகினி முதல் சல்வார் கமீஸ் வரை பல்வேறு ஆடைத் தேர்வுகள் பெண்களுக்கு இருப்பதாக அவர் அந்தப் பதிவில் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கங்கனா ரனாவத் நடித்த மற்றொரு பழைய விளம்பரமும் இணையவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது. நக்ஷத்ரா நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் கங்கனா தோன்றியிருந்த நிலையில், அதில் அவர் ஒரு தோள்பட்டை வடிவமைப்புடன் கூடிய வெள்ளை நிற உடையை அணிந்திருந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த பழைய விளம்பரத்தையும் தற்போதைய விவாதத்துடன் இணைத்து சமூக வலைதளப் பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். கங்கனா தற்போது தெரிவிக்கும் கருத்துகளுக்கும், அவர் கடந்த காலங்களில் அணிந்திருந்த உடைகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக சிலர் விமர்சித்து வருகின்றனர். இதனால், கிருதி சனோனின் ஆடை குறித்த கங்கனாவின் கருத்து தொடர்பான விவாதம், தற்போது கங்கனாவின் முந்தைய பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் இடம்பெற்ற ஆடைத் தேர்வுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்