அஜித் மற்றும் திரிஷா காதலித்து திருமணம் செய்து கொண்டு, அஜர்பைஜானில் அமைதியான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பின், கருத்து வேறுபாட்டின் காரணமாக, திரிஷா அஜித்துடன் பிரிந்து செல்ல முடிவு செய்கிறார். இந்த சூழ்நிலையில், திரிஷா அம்மா வீட்டிற்கு செல்லும் போது அவர் கடத்தப்படுகிறார். இதனைத் தொடர்ந்து திரிஷாவை எப்படி அஜித் கண்டு பிடித்தார்? எப்படி மீட்டார் ? என்பதே படத்தின் மீதி கதை.
பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் விடாமுயற்சி. அஜித் போன்ற பெரிய ஹீரோவை வைத்து மாஸ் படம் கொடுக்காமல் ஒரு கிளாஸ் படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி கொடுத்துள்ளார். வழக்கமான அஜித் படங்களில் இருந்து இது சற்று விலகி நிற்கிறது.
படத்தின் ஹீரோ அஜித், தொடக்கத்தில் தனது வழக்கமான ஸ்டைலில் தோன்றினாலும், பின்னர் பிளாஷ்பேக் காட்சிகளில் இளமையாக மாறி அருமையான நடிப்பை வெளிப்படுத்துகிறார். திரிஷாவின் கடத்தலின் பின்னணி மற்றும் அஜித்தின் அவளை மீட்கும் முயற்சியில், படம் ஒரு பரபரப்பான பயணத்தை தருகிறது. மென்மையான காதல் காட்சிகளிலும், பதற்றமான ஆக்ஷன் காட்சிகளிலும் சிறந்த முறையில் அஜித் நடித்துள்ளார்.அஜிதின் இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, அஜர்பைஜானில் உள்ள பாலைவன சாலையில் நடந்த காட்சிகள், கார் ரேசிங் மற்றும் ஆக்ஷன், புது பரிமாணத்தை கொடுத்துள்ளன.
திரிஷாவுக்கு இதில் குறைவான காட்சிகள் இருந்தாலும் அசத்தியுள்ளார். அஜித்துடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் சிறந்த நடிப்பை காட்டியுள்ளார். இதில் அர்ஜுன் மற்றும் ரெஜினா தங்களுடைய வில்லன் குணங்கள் நிறைந்த காட்சிகளுடன் கதையை மேலும் திகிலாக்கின்றனர். ஆரவ்வும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார்.
அனிருத்தின் இசை மற்றும் பின்னணி இசை, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் படம் பளிச்சிடுகிறது.
மைனஸ்
முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி வேகம் எடுக்கிறது.
அஜித் மற்றும் அர்ஜுன் இடையே சண்டைக் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும், அஜித் ரசிகர்களுக்கு சராசரி அனுபவத்தையே இந்த விடாமுயற்சி படம் தருகிறது.