பொழுதுபோக்கு

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது

டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்

Muthu Lakshmi

தமிழ் சினிமாவை கிராமங்களின் மண்வாசனையுடன் உலக அரங்கிற்கு கொண்டு சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு தமிழ் திரைப்படத் துறையினரையும், ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த ஒரு படமே தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய படைப்பாக அமைந்தது. ஸ்டூடியோவிற்குள் மட்டுமே முடங்கியிருந்த தமிழ் சினிமாவை கிராமப்புறங்களின் இயற்கை சூழலுக்குள் கொண்டு வந்து, புதிய திரைப்பட மொழியை உருவாக்கிய பெருமை அவரையே சாரும்.

அறிமுகப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, வேதம் புதிது, முதல் மரியாதை, கருத்தம்மா, பசும்பொன், பொம்மலாட்டம் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படைப்புகளை அவர் வழங்கினார். சமூக அக்கறை, கிராமிய வாழ்க்கை, மனித உணர்வுகள் மற்றும் காதலை மையமாகக் கொண்ட அவரது படங்கள் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றன.

திரைப்படத் துறையில் அவரது பங்களிப்பிற்காக 6 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 2004-ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பெற்றார். இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தன்னை நிரூபித்த பாரதிராஜா, சமீப ஆண்டுகளிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியான ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, தனது மகன் மனோஜின் மறைவுக்குப் பிறகு மனரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சில மாதங்கள் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவர், பின்னர் சென்னை திரும்பினார். கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் நுரையீரல் தொற்று காரணமாக மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீட்டிலேயே மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். தமிழ் சினிமாவிற்கு ராதிகா சரத்குமார், ராதா, ரேவதி, கார்த்திக் உள்ளிட்ட பல திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தியதுடன், பலரின் திரையுலகப் பயணத்திற்கும் வழிகாட்டியாக இருந்தார். அவரது படைப்புகள் தலைமுறைகளை கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்.

தமிழ் சினிமாவின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்த பாரதிராஜாவின் மறைவு, ஒரு இயக்குநரின் மறைவு மட்டுமல்ல; தமிழ் திரைப்பட உலகின் ஒரு பொற்காலத்தின் முடிவாகவும் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.