2016ம் ஆண்டில் நானும் ரௌடி தான் படம் மூலம் தொடங்கிய விக்கி நயன் காதல் கதை, 6 வருடங்களாக தொடர்ந்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி அளித்து வருகிறது. பல பிரச்சனைகளில் சிக்கி, பல காதல் தோல்விகளைக் கண்டாலும், திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்று, இன்று லேடி சூப்பர் ஸ்டாராக இந்திய சினிமா உலகில் வலம் வருகிறார் நயந்தாரா.
மரியா என்ற இளம் பெண் ஒரு தனியார் மலையாள தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து தற்போது தென்னிந்திய திரையுலகை ஆண்டு வருவதோடு, ஷாருக்கானுடனும் ஜவான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் களமிறங்க இருக்கிறார். இவரது காதல் வாழ்க்கை இன்று ஒரு அழகான திசைக்கு திரும்பியுள்ளது. பாரம்பரிய தமிழ் வழி திருமணம் செய்து, இன்று மணக்கோலத்தில் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறார் நயந்தாரா.
ரஜினி, விஜய், சூர்யா, அட்லி தொடங்கி, ஷாருக்கான், விஜய் சேதுபதி, கிருத்திகா உதயநிதி, சரத்குமார், ராதிகா சரத்குமார்,
ஷாலினி அஜித்குமார், அனோஷ்கா அஜித்குமார், ஆத்விக் அஜித்குமார், ஷாமிலி, விக்ரம் பிரபு, குஷ்பு, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கவின், திவ்ய தர்ஷினி வரையிலான பல திரைப் பிரபலங்கள் முன்னிலையில், விக்கி நயன் திருமணம் நல்ல படியாக இன்று, மகாபலிபுரத்தில், Sheraton Grand என்ற நட்சத்திர ஹோட்டலில் நடைப்பெற்றது. மேலும், தயாரிப்பாளர் போனி கபூர், விக்ரம் பிரபு, சர்ச்சைக்குறிய மலையாள நடிகர் திலீபன், இயக்குனர் ஆனந்த் ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், டிடி, இயக்குனர்கள் சிவா, ஹரி, மணி ரத்ணம் போன்ற பலரும் இந்த திருமண வைபோகத்தில் கலந்து கொண்டனர்.
அழகான சிவப்பு நிற செல்ஃப் எம்பிராய்டரி புடவை அணிந்து, ஜேட் என்ற வடிவமைப்பை அணிந்திருக்கிறார். மேலும், எமரால்டு கற்கள் பதித்த நகைகளை அணிந்திருக்கிறார். கழுத்தில் தாலியுடன், இருவரும் மகிழ்ச்சியாக இருக்க, விக்னேஷ் சிவன் நயந்தாராவிற்கு முத்தமிடும் ஒரு போட்டோவை விக்கி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில், “பத்து எண்ணிக்கைக்குள், அவள் நயன், நான் தான் அந்த ஒருவன். இன்று ஜூன் 9, அனைத்தும் கடவுள், பிரபஞ்சம், பெற்றோர்களின் ஆசீர்வாதங்களுடன், நண்பர்களின் வாழ்த்துகளுடன் Jus married #Nayanthara” என்று பதிவிட்டிருந்தார். மேலும், ஹாஷ்டாக் விக்கி நயன் வெட்டிங் என்று எழுதி இருக்கிறார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அஜித் இதில் கலந்து கொண்டதாக ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது குறித்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் மிக ஆர்வமாகக் காத்து வருகின்றனர். முன்பே, திருமணம் முடிந்து வருகிற 11ம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள இருப்பதாக விக்கி தெரிவித்த நிலையில், புது தம்பதியினரை வரவேற்க ரசிகர்கள் ஆர்வமாகக் காத்து வருகின்றனர்.