நடிகை தீபிகா படுகோன், தான் நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலை என்று கோரிக்கை வைத்ததால், 'ஸ்பிரிட்' திரைப்படம் மற்றும் 'கல்கி 2898 AD' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
'லைவ் லவ் லாஃப்' (Live Love Laugh) என்ற தனது அறக்கட்டளையின் 10 ஆண்டுகாலத்தைக் கொண்டாடும் நிகழ்வின்போது, அவர் அளித்த பேட்டியில், இந்தியத் திரையுலகில் நிலவும் "இரட்டை வேடங்களையும்" (Double Standards), பெண் நடிகர்கள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பாகுபாட்டையும் அவர் கடுமையாகச் சாடினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் ஒரு பெண் என்பதன் காரணமாக, எனது கோரிக்கை யாரோ ஒருவருக்கு அதிகப்படியான அல்லது வற்புறுத்துவது போலத் தோன்றினால், அப்படியே இருக்கட்டும். ஆனால், இந்தியத் திரையுலகில் உள்ள பல ஆண் சூப்பர் ஸ்டார்கள், பல ஆண்டுகளாக 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள் என்பது இரகசியமல்ல. ஆனால், அது ஒருபோதும் தலைப்புச் செய்தியாக ஆனதில்லை.
நான் இப்போது பெயர்களைக் குறிப்பிட்டு இதைப் பெரிதாக்க விரும்பவில்லை. ஆனால், பல ஆண் நடிகர்கள் பல ஆண்டுகளாக நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்ததுதான். அவர்களில் பலர் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே 8 மணி நேரம் வேலை செய்கிறார்கள். வார இறுதி நாட்களில் (Weekends) அவர்கள் வேலை செய்வதில்லை" என்றார்.
சில மாதங்களுக்கு முன்பு, தீபிகா படுகோன் கல்கி இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது. பிறகு, தயாரிப்பு நிறுவனமான வியாஜயந்தி மூவிஸ் (Vyjayanthi Movies), செப்டம்பர் 18 அன்று எக்ஸ் பதிவில் இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.
அதில், "கல்கி 2898 AD இன் வரவிருக்கும் இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோன் பங்கேற்க மாட்டார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். கவனமாகப் பரிசீலித்த பிறகு, நாங்கள் விலகுவது என்று முடிவெடுத்துள்ளோம். முதல் படத்தைத் தயாரித்த நீண்ட பயணத்திற்குப் பிறகும், எங்களால் ஒரு Partnership-ஐ கண்டுபிடிக்க முடியவில்லை. கல்கி 2898 AD போன்ற ஒரு படத்திற்கு அந்த அர்ப்பணிப்பும் அதற்கும் மேலானதும் தேவை," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல், கடந்த மே மாதம் தீபிகா படுகோன் சந்தீப் ரெட்டி வாங்காவின் 'ஸ்பிரிட்' திரைப்படத்திலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு, நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலைக் கோரிக்கை, லாபத்தில் பங்கு (Profit-sharing) கோரியது மற்றும் தெலுங்கில் வசனம் பேச விருப்பம் இல்லாதது போன்ற காரணங்கள் கூறப்பட்டன.
சமீபத்திய தகவலின்படி, தீபிகா படுகோன் தன் சம்பளத்தை ரூ. 25 கோடி உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தனக்காகச் செட்டுக்கு வரும் 25 பேர் கொண்ட குழுவுக்குமான அதிகப்படியான செலவுகளையும் கோரியதாகக் கூறப்பட்டது.
வியாஜயந்தி மூவிஸ் அறிவிப்பு வெளியிட்ட ஒரு நாள் கழித்து, ஷாருக்கான் உடனான தனது ஆறாவது படமான 'கிங்' குறித்துத் தீபிகா ஒரு இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர்ந்தார்.
"கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு, 'ஓம் சாந்தி ஓம்' படப்பிடிப்பின் போது அவர் எனக்குக் கற்றுக்கொடுத்த முதல் பாடம் என்னவென்றால், ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அனுபவமும், அதை நீங்கள் யாருடன் உருவாக்குகிறீர்கள் என்பதும்தான் அதன் வெற்றியை விட மிக முக்கியமானது. நான் இதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன், அந்தப் பாடத்தை நான் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் பயன்படுத்தினேன். அதனால்தான் நாங்கள் மீண்டும் எங்கள் 6வது படத்தைத் தயாரிக்கிறோம்," என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு, தீபிகாவின் தொழில்முறையைக் கேள்வி எழுப்பிய விமர்சகர்களுக்கு அவர் அளித்த மறைமுகப் பதில் என்றே கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.