பொழுதுபோக்கு

"நீங்க எங்களுக்கு சோறு போட்ட அம்மா" - விஜயகாந்தை வணங்கி வீடியோ வெளியிட்ட எம்.எஸ். பாஸ்கர்!

வெறும் நடிகராகவோ அல்லது அரசியல் தலைவராகவோ மட்டும் பார்க்காமல், தனக்கு வாழ்வளித்த ஒரு 'அம்மா'வாகவே கருதுவதாக...

மாலை முரசு செய்தி குழு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான 'கேப்டன்' விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் உணர்ச்சிப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான எம்.எஸ். பாஸ்கர், படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த போதிலும், அங்கேயே விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எம்.எஸ். பாஸ்கர் தனது வீடியோ செய்தியில், விஜயகாந்த் அவர்களை வெறும் நடிகராகவோ அல்லது அரசியல் தலைவராகவோ மட்டும் பார்க்காமல், தனக்கு வாழ்வளித்த ஒரு 'அம்மா'வாகவே கருதுவதாகத் தெரிவித்தார். ஆரம்ப காலத்தில் 'இனிக்கும் இளமை' படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்தது முதல், 'தர்மபுரி', 'நிறைந்த மனசு' போன்ற பல படங்களில் அவருடன் பணியாற்றிய நாட்களை அவர் மிகுந்த நன்றியுடன் நினைவு கூர்ந்தார். விஜயகாந்த் அவர்கள் தன்னிடம் காட்டிய அன்பு, ஆதரவு, பாசம் மற்றும் பரிவு ஆகியவை இந்த நினைவு நாளில் தன் நெஞ்சை அழுத்துவதாக அவர் மிக உருக்கமாகப் பேசினார்.

விஜயகாந்த் அவர்கள் உடலால் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டாலும், உள்ளத்தாலும் உணர்வாலும் உயிராலும் அவர் என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று எம்.எஸ். பாஸ்கர் குறிப்பிட்டார். அவரது ஆன்மா நம்மை என்றும் வழிநடத்த வேண்டும் என்றும், நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் அவர் பிரார்த்தனை செய்தார். படப்பிடிப்புக்காகப் பயணத்தில் இருந்தபோது வழியில் ஒரு இடத்தில் விஜயகாந்தின் படத்தைக் கண்டு அஞ்சலி செலுத்தியதாகக் கூறிய அவர், "மறுபடியும் எங்க கேப்டனாகவே எங்களிடம் வந்துவிடுங்கள் அண்ணே" என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.