பொழுதுபோக்கு

மறைந்த நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம்...!

Tamil Selvi Selvakumar

நேற்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமான நடிகர் மயில்சாமியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் மயில்சாமி. இவர் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவில் பிரபலமாக நடித்து வந்த இவர், சினிமாவையும் தாண்டி சமூகத்தில் நடைபெறும் பல சர்ச்சையான விஷயங்களுக்கு குரல் கொடுத்து வந்தார். ஆனால், சமீப காலமாகவே திரையிலும், பொது வெளியிலும் தோன்றாமல் இருந்து வந்த மயில்சாமி, நேற்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். 

தொடர்ந்து, அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, இவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு திரைபிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.

பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு வீட்டில் குடும்ப பாரம்பரிய முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மயில்சாமியின் உடல் ஊர்வலமாக எடுத்து  செல்லப்பட்டது. இவரின் இறுதி ஊர்வலத்தில் திரைப்பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என திரளானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மின் மயானத்தில் மயில்சாமியின் உடல்  தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையில் நடிகர் மயில்சாமியின் உடலுக்கு இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மயில்சாமி தன் நெடுங்கால நண்பர் என்றும், அவரது மறைவு சமூகத்திற்கு பெரும் இழப்பு என்றும் தெரிவித்தார். மேலும், கேளம்பாக்கம் சிவனுக்கு தனது கையால் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற அவரது கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.