தமிழ் திரையுலகின் இரு துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் ஆகியோர் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரையில் இணையப்போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது . ரெட் ஜெயண்ட் மூவிஸ் (Red Giant Movies) தயாரிப்பில் உருவாகும் இந்த பிரம்மாண்ட படத்தின் அதிகாரப்பூர்வ புரோமோ சற்று முன் வெளியாகி ரஜினி மற்றும் கமல் ரசிகர்களிடையே மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வெளியான புரோமோ வீடியோ வழக்கம் போல நெல்சான் பாணியில் கலகலப்பாகவும் ஸ்டைலாகவும் அமைந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புரோமோவில் மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் தோற்றமளிக்கும் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் சேர்ந்து படத்தின் ஹீரோ யார் என்று நெல்சனிடம் கேள்வி கேட்கும் விதமாக புரோமோ வெளியாகியுள்ளது.
கடந்த பல மாதங்களாகவே ரஜினி - கமல் கூட்டணி குறித்துப் பல்வேறு ஊகங்கள் நிலவி வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புரோமோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை 'ஜெயிலர்' புகழ் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' மற்றும் தற்போது உருவாகி வரும் 'ஜெயிலர் 2' ஆகிய படங்களை இயக்கி வரும் நெல்சன், கோலிவுட்டின் இரு பெரும் ஆளுமைகளை எப்படி ஒரே கதையில் கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. இந்தப் படம் ஒரு காமெடி த்ரில்லர் பாணியில் அமையும் என்றும், வன்முறை குறைவாகக் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடக்கத்தில் ஒன்றாக நடித்த இருவரும் தனித்தனியாக நடித்து இரு பெரும் துருவங்களாக வளர்ந்து நிற்கும் நிலையில் மீண்டும் 46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இந்த படத்தின் கதை மற்றும் படப்பிடிப்பு திரை ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சுமார் 225 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவர் மீண்டும் கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உருவெடுத்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.