பொழுதுபோக்கு

ஹேக் செய்யப்பட்ட பார்த்திபனின் ஃபேஸ்புக் கணக்கு மீட்பு..!

முழுச்சிட்டுக்கும் போதே கண்ணை பிடுங்கி காயிலாங்கடையில் வித்துட்டுப் போயிடுறாங்க - பார்த்திபன்

Malaimurasu Seithigal TV

இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பல பரிணாமங்களில் சினிமாவில் கலக்கி வருபவர் பார்த்திபன். இவரது படங்கள் என்றாலே வித்தியாசமான ஒரு கதைகளம் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவரது நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 படம் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. ஒரே ஒரு ஆளாக 2 மணி நேரம் ஒரு கதையை இவர் கொண்டு சென்ற விதம், தமிழ் சினிமாவிலேயே இது தான் முதன்முறை. இந்தப் படத்தை தற்போது ஹிந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து இயக்கி வருகிறார் பார்த்திபன். இந்த நிலையில், இவரது முகநூல் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்திருக்கின்றனர்.

இதற்கு அவர், ’’என் பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம், அறிவு மிகுந்தவன் ரசிகராகலாம். ஆனால் அறிவுக்கே பிறந்த சில ஸ்வீட் எனிமிஸ் ஹேக் செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் செய்ய சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்’’ என தெரிவித்துள்ளார். பிறகு இரண்டு தினங்களுக்கு பிறகு பார்த்திபனின் முகநூல் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. இது குறித்து, ’’முழுச்சிட்டுக்கும் போதே கண்ணை பிடுங்கி காயிலாங்கடையில் வித்துட்டுப் போயிடுறாங்க பேடு ஹேக்கர்ஸ். கெடுத்திடும் புத்தி இருவழி கத்தி. எடுத்தவனையே குத்தி காவு அது வாங்கிடாதோ? இரவின் நிகழ்களில் நான் எழுதிய பாடல் வரிகள். திரும்பக் கிடைக்க உதவியவர்களுக்கு நன்றி. இனி இனிதே நட்பு தொடரும்’’ என கூறியுள்ளார்.