பொழுதுபோக்கு

”ஜெயிலர்” படத்திற்கு வந்த புதிய சோதனை...திரையிட தடை விதிக்க வேண்டும்?

Tamil Selvi Selvakumar

வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள ‘யுஏ’ சான்றிதழை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

நடிகர் ரஜினிகாந்த் நடித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் படத்தில் வன்முறை காட்சிகள் நிறைந்து இருப்பதாகக் கூறி, வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அவர் தனது மனுவில், வன்முறைக் காட்சிகள் நிறைந்த இந்த படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் "யுஏ" சான்றிதழை வழங்கி உள்ளதாகவும், வில்லன் கதாபாத்திரம் கூலிப்படையினரை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சுத்தியலால் அவர்களை அடித்துக் கொல்வது போலவும், கதாநாயகன், ஒருவரின் தலையை துண்டாக வெட்டுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

படத்தின் பெரும்பாலான  காட்சிகளில் கத்தி, ரத்தம், வெட்டு, துப்பாக்கி சூடு போன்ற வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், 12 வயதுக்கு குறைவானவர்களும் பார்க்கும் வகையிலான "யுஏ" சான்றிதழ் வழங்கியிருப்பது தவறானது என்றும், அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் இந்த படத்திற்கு ‘ஏ’ சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் படத்திற்கு ஜூலை 27ல் வழங்கப்பட்ட "யுஏ" சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கு முடியும் வரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.