நமது மாலைமுரசு சேனலுக்கு பேட்டியளித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரும் திரைப்பட நடிகருமான கலைமாமணி பூச்சி முருகன் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததன் மூலம் சுவாரசியமான பல புதிய தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் சங்க கட்டிடத்தின் பணி எப்போது தான் முடியும்?
நாங்கள் நினைத்த அட்டவணை படி இந்த கட்டிடத்தை மூன்று வருடங்களுக்கு முன்பே கட்டி முடித்திருக்க வேண்டும். தனியாரிடம் ஒப்பந்தத்தில் இருந்த இந்த இடத்தை நாங்கள் இரண்டரை கோடி கொடுத்து தான் மீட்டெடுத்தோம். அதன் பிறகு கட்டிடம் கட்ட அனைத்து நடிகர்களும் ஒத்துழைப்பு கொடுத்து “ஸ்டார் நைட்” என்ற நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் பணத்தில் கட்டிட பணிகள் விரைவாக நடந்தது. பின்னர் நடிகர் சங்க தேர்தலில் எழுந்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சிலர் வழக்கு பதிவு செய்தனர், எனவே அந்த தேர்தலின் வாக்குகளை எண்ணவே இரண்டரை வருடங்கள் ஆனது இதனால் நடிகர் சங்கம் ஒரு பெரிய அடி வாங்கியது.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நிறுத்தப்பட்ட கட்டிடத்தின் கட்டுமான பணியை மீண்டும் தொடங்குவது என்பது சாதாரண வேலை கிடையாது. மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது பொருட்களின் விலைவாசிகள் அதிகமாகிவிட்டது. எனவே சில நடிகர்கள் கொடுத்த பணத்தை முதலீடாக வைத்து வங்கியில் 30 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளோம் அதை வைத்து விரைவில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும்.
குறிப்பிட்ட நடிகர்களிடம் அதிக பணம் கேட்டாரா விஷால்?
எந்த நடிகர்களிடமும் குறிப்பிட்ட பணம் கொடுக்க வேண்டும் என கேட்கப்படவில்லை. பொதுக்குழு வைத்து முடிவெடுக்கப்பட்டு விருப்பமுள்ள நடிகர்கள் பணம் கொடுக்கலாம் என சொன்னோம். சில நடிகர்கள் அவர்களால் முடிந்த பணத்தை கொடுத்தார்கள், அதற்காக பணம் கொடுக்காதவர்கள் மீது எங்களுக்கு கோபமும் கிடையாது. 250 கலைஞர்களும் வந்ததால் தான் ஸ்டார் நைட் நிகழ்ச்சி நடத்த முடிந்தது அதன் மூலம் பணமும் கிடைத்தது. அனைத்து கலைஞர்களும் அவர்களது கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள்.
மீண்டும் ஒரு ஸ்டார் நைட் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்து கொண்டுதான் இருக்கிறோம், நிச்சயம் நடத்துவோம் ஆனால் அது துபாயில் நடத்தலாமா? இல்லை சென்னையில் நடத்தலாமா? என ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். எதையும் நாங்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பது இல்லை கமல், ரஜினி போன்ற மூத்த நடிகர்களிடம் பேசித்தான் முடிவெடுப்போம்.
நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்கப்படுமா?
விஜயகாந்த் சார் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையும் அளவில்லா அன்பும் உண்டு அதே போல அவருக்கும் என் மீது நிறைய அன்பு இருந்தது. உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைவரும் அவரை பார்க்க சென்றோம் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, தலைவர் நாசர் ஆகியோர் முன்னதாகவே சென்றுவிட்டனர், நான் செல்லும் போது எனக்கு அமர இருக்கை இல்லை அப்போது என்னை கட்டி அணைத்து அவரது இருக்கையில் அமர வைத்தார் விஜயகாந்த். எப்போதும் அவருக்கான மரியாதை நடிகர் சங்கத்தில் கொடுக்கப்படும் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ் நடிகர் சங்கம் என ஏன் பெயர் வைக்கவில்லை?
தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர் 1950 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது நடிகர் சங்கத்திற்கான இடத்தை வாங்க அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா நடிகர்களும் பணம் கொடுத்து இருக்கின்றனர். எனவே எப்போதும் தாய் வீட்டை மறக்க மாட்டோமோ அது போல இதனையும் நாம் மறக்க கூடாது.
நடிகர் சங்க கட்டிடத்தில் எந்த மாதிரியான வசதிகள் உள்ளது?
ஒரு கலையரங்கமும், மேல் தளத்தில் ஒரு மண்டபமும் உள்ளது. மேலும் நடிகர்களுக்கு உள்விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை கட்ட இருக்கிறோம். படங்களின் இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் இங்கேயே நடத்துவது போல வடிவமைத்துள்ளோம். இதிலிருந்த வரும் வருமானத்தின் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு பொருள் உதவி செய்யப்படும்.
விஷாலின் திருமண அறிவிப்பு உங்களுக்கு முன்னதாகவே தெரியுமா?
நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும் முதல் நிகழ்ச்சி செயலாளர் விஷாலின் திருமணம் என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, அவரின் திருமணம் நல்லபடியாக நடக்கும். எங்களுக்கே அவரின் திருமணத்தை பற்றி விஷால் காலதாமதமாக தான் சொன்னார்.
வதந்திகளை பரப்புவோருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அனைவரும் எங்களின் நண்பர்கள் தான், யூடியூப்பில் சிலர் நடிகர்களின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி எல்லாம் பேசுகிறார்கள் அது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எங்களிடம் ஏதாவது தவறு இருந்தால் அதை சுட்டி காட்டுங்கள். ஆனால் அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி பேச யாருக்கும் சட்டப்படி உரிமை கிடையாது. சில நடிகைகள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியவில்லை என வருத்தப்படுகிறார்கள், எனவே இது போன்று பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள் நான் அனைவரையும் குறிப்பிடவில்லை, சிலர் மட்டுமே இது போன்று நடந்து கொள்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.