பொழுதுபோக்கு

என்றும் அன்புடன் ‘அப்பு’... விடை பெற்றார் புனீத் ராஜ்குமார்...

கன்னட திரையுலகில் ’பவர் ஸ்டார்’ என அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார், இப்போது உயிருடன் இல்லை என்பதை நம்ப சற்று கடினமாகத்தான் இருக்கிறது.

Malaimurasu Seithigal TV

மொழி புரியாவிட்டாலும், புனீத் ராஜ்குமாரின் நடனத்திற்கு கர்நாடகா தாண்டி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் உண்டு. தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா துறைகளைப் போல கன்னட திரையுலகம் பெரியதில்லை என்றாலும், தனது அதிரடியான ஆக்சன் மற்றும் அசத்தலான டேன்ஸ் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் தான் புனீத்.

பிறவிக்கலைஞன் என்று சொல்லிக் கேட்டிருப்போம், அதற்கு பொருத்தமானவர் லோகித் ராஜ்குமார். ஆம் புனீத் ராஜ்குமாரின் இயற்பெயர் லோகித். 6 மாத குழந்தையாக இருக்கும் போதே திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், 7 வயதில் ’சலிசுவா மொதகழு’ படத்திற்காகவும், 8 வயதில் ’எர்ரட நக்ஷத்ரகழு’ ஆகிய படங்களுக்காக, கர்நாடக அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும், 10 வயதில் ’பெட்டடா ஹூவு’ படத்திற்காக ’சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை’யும் வென்று அசத்தினார். 2002ம் ஆண்டு ’அப்பு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானதால், அவரை அப்பு என செல்லமாக அழைத்து வருகின்றனர் கன்னட சினிமா ரசிகர்கள். 

அபி, வீர கன்னடிகா, அஜய், அரசு, ராம், ஹுதுகரு, அஞ்சனி புத்ரா, யுவரத்னா போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள புனீத் ராஜ்குமார், திரையுலக ஜாம்பவான்களான ராஜ்குமார், பர்வதம்மா தம்பதியின் 3ஆவது மகன் ஆவார். 1999ம் ஆண்டு அஷ்வினி ரேவந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட புனீத் ராஜ்குமாருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும், கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாராக விளங்கும் சிவ ராஜ்குமார் மற்றும் ராகவேந்திர ராஜ்குமார் இருவரும் புனீத் ராஜ்குமாரின் அண்ணன்கள் ஆவர். 

சமீபத்தில் சிவராஜ்குமாரின் ’பஜ்ரங்கி 2’ பட இசைவெளியீட்டு விழாவில், தனது அண்ணன் மற்றும் கே.ஜி.எஃப். புகழ் யஷ் உடன் நடனமாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய புனீத், தற்போது தனது ரசிகர்களுக்கு மீளாத் துயரை அளித்துச் சென்று விட்டார். என்றாலும்கூட, ரசிகர்களின் மனதில் என்றும் அன்புடன் இருப்பார் ‘அப்பு’.