"அவரும் நானும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.. நான் அவர் விரலையே பார்த்துக்கொண்டிருப்பேன்" இயக்குநரின் உருக்கமான அஞ்சலி! | Live Blog 
பொழுதுபோக்கு

"அவரும் நானும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.. நான் அவர் விரலையே பார்த்துக்கொண்டிருப்பேன்" இயக்குநரின் உருக்கமான அஞ்சலி! | Live Blog

தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா. - MK Stalin புகழாரம்

மாலை முரசு செய்தி குழு

தேவா உடலுக்கு மரியாதை செலுத்தியபிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் 

"நாங்கள் அனைவரும் படித்தது ஒரே பள்ளி.

மறக்க முடியாத நினைவுகள் நிறைய இருக்கிறது.

அவருக்கு கோவம் வந்து என்னுடைய வாழ்க்கையில் பார்த்ததி இல்லை. அந்தளவிற்கு சாந்தமான ஆள்.

பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமலஹாசன் ஒரு டியூனை சொன்னார். அதற்கு எந்த கருத்தும் தெரிவிக்காமல் உடனடியாக ஓகே சொன்னார். அந்த பாடல் தான் காதலா காதலா.

எவ்வளவோ படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவருடைய கை மிகவும் மென்மையாக இருக்கும். நான் அவரை சந்திக்க வரும் போதெல்லாம் அவருடைய விரலையே தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பாட்ஷாக்கு பிறகு முத்து படத்தில் ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து பணியாற்றினேன். அந்த படத்தில் ரஜினி அவர்கள் தனக்கு பாட்ஷா படத்திலிருந்து போல எனக்கு இசை வேண்டுமென கூறினார்."

நடிகை கஸ்தூரி அஞ்சலி 

"அவருக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லாமல் தான் இருந்தது; ஆனால் சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததை நான் பார்த்தேன்...


நினைவுகளால் நிறைந்த அந்தத் தொண்ணூறுகளின் (90s) பொற்காலம் 'ராஜா - ரஹ்மான் - தேவா' என்ற இந்த முப்பெரும் இசைக் கூட்டணி தான் ஆதிக்கம் செலுத்தியது.

'ஆத்தா உன் கோயிலிலே' திரைப்படத்தின் எனது முதல் நாள் படப்பிடிப்பே அவர் இசையமைத்த 'மாரி முத்து மாரி' பாடலைப் பாடித் தான் தொடங்கியது...


அவர் தீவிரமாக வழிபட்ட அந்த கருமாரியம்மன், 'தேனிசைத் தென்றல்' தேவா சார் அவர்களின் ஆத்மாவிற்கு நற்கதியை (சத்கதி) வழங்கட்டும்".

அஞ்சலி செலுத்த நடிகர் ராதாரவி வருகை

இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நடிகர் ராதாரவி வருகை

நேரில் வந்த விஜய் 

தி நகரில் உள்ள தேவா இல்லத்துக்கு அவரது உடலுக்கு மரியாதை செலுத்த வந்தார் முதலமைச்சர் விஜய்.

நேரில் வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி 

இசை அமைப்பாளர் தேவா மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நடிகர் ஹிப்பாப் ஆதி வருகை..

சமூக வலைத்தளங்களில், "தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

‘மீசைய முறுக்கு-2’ படத்தின் உருவாக்கத்தின் போதும், வெளியீட்டின் போதும் அவரோடு உரையாடிய அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை.

சமீப காலத்தில் அவரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன். எந்தவித பின்புலமும் இல்லாமல் கலைத்துறையில் நுழைந்து மிகப்பெரிய வெற்றிச் சிகரங்களைத் தொட்டு ஏராளமானோருக்கு முன்மாதிரியாக திகழ்ந்த ஒருவரை தமிழ்ச் சமூகம் இழந்துள்ளது.

எளிய மக்களின் இசையை திரையில் கொண்டுச் சேர்த்த மாபெரும் கலைஞரான தேவா என்றென்றும் நினைவுக் கூறப்படுவார். தேவா அப்பாவின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், ரசிகர்களில் ஒருவனாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் சத்யராஜ் பேட்டி 

என்னுடைய படத்திற்கு தனித்துவமான பாடலாக தகடு என்ன தமிழ்நாட்டுக்கு தெரியும் என்ற பாடல் இசை அமைத்தவர் அவர்தான்.. புது மனிதன் என்கிற படத்தில் தான் முதன்முறையாக என்னுடன் வேலை பார்த்தார். அந்த படத்தில் அனைத்து பாடல்களுமே வெற்றி பெற்ற பாடல்கள்.. அவருடைய மறைவு தாங்க முடியாத வருத்தம். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின் இரங்கல் 

தமிழ்த்திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளராக திகழ்ந்த தேனிசை தென்றல் தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தி கேட்டு வருந்தினோம். கழகத்தலைவர் அவர்களுடன், தேவா அவர்களின் இல்லம் சென்று மறைந்த அவரது திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம்.

சகோதரர் ஸ்ரீகாந்த் தேவா உட்பட அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்.

இசை அமைப்பாளராக மட்டுமின்றி பாடகர் - பாடலாசிரியர் என்று பல்வேறு துறைகளில் சாதித்தவர். சென்னையின் கானா பாடல்களுக்கு உலக அளவிலான முகவரியை தந்த தேவா அவர்களின் தேனிசை என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

இறுதிசடங்கு எப்போது?

தேவாவின் பூர்வீகமான ராணிப்பேட்டை மாவட்டம் ஆர்க்காட்டில் அவரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நாளை பிற்பகல் 1 மணி அளவில் நடைபெற உள்ளது.

ராமராஜன் அஞ்சலி 

"தேவா சார் இறந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாகவும் பெருந்துயரமாகவும் இது பொய்யான செய்தியென வரக்கூடாதா? என மனம் ஏங்குகிறது.

நான் முதல் படத்திற்கு வாய்ப்பளித்தேன் என்பதை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மேடையிலும் சொல்லி நன்றி கூறி வந்த மிகச்சிறந்த பண்பாளர் பாசமிகு தேவா சார் அவர்கள்,

அவரின் இசை பிடிப்புனாலும் அதில் ஆழ்ந்து கற்பிப்புனாலும் தொடர்ந்து கணக்கிலங்கடாத படங்களுக்கு இசையமைத்து ஒரு நல்ல இசையமைப்பாளராகவும் நல்ல மனிதராகவும்,

சிறந்த ஆன்மீகவாதியாகவும் இன்றளவும் வலம் வந்த மிகச்சிறந்த திறமைசாலி தேவா அவர்கள்,

புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் "இயல் இசை நாடக மன்ற" தலைவராகவும் கழக கொள்கை பாடல்களை உருவாக்கியும் வந்த அம்மா மீது மாறா பற்றுக்கொண்டவர் தேவா சார் அவர்கள்,

அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....

கமல்ஹாசன் அஞ்சலி 

அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர்.

அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது.

அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.

நேரில் வந்த ரஜினிகாந்த்

தி நகரில் வைக்கப்பட்டுள்ள தேவாவின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் வருகை தந்துள்ளார்.

ரஜினிகாந்த் அஞ்சலி

உருக்கமாக அஞ்சலி தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி 

தமிழ் திரையுலகின் மாபெரும் ஆளுமையான #தேவா சார் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைகிறேன்.

அவரது இசை தலைமுறைகள் கடந்து அனைவரின் நெஞ்சங்களையும் தொட்டது.

'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் கிடைத்தது, என் வாழ்நாளில் நான் என்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு இனிமையான நினைவாக இருக்கும்.

அவரது காலத்தால் அழியாத இசையின் வழியே அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும். எனது ஆழ்ந்த் இரங்கல்கள்.

முன்னாள்அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் 

தனது தனித்துவமான இசையாற்றலால் தமிழ் திரையுலகத்தில் தனிமுத்திரைப் படைத்தவர், தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை இசையால் நனைத்தவர், இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிதையில் வைரமுத்து இரங்கல் 

சாவாப் பாடல்கள் தந்த

தேவா மறைந்துவிட்டார்

தேனிசைத் தென்றல்

நின்று போயிற்றா?

நெஞ்சு கனக்கிறது

தன் பேச்சு மூச்சு

அனைத்திலும்

இசையாகவே இருந்தவர்

சங்கீதத்தோடு

இங்கிதம் தெரிந்தவர்

பண்ணிசைக்கத் தெரிந்த

பண்பாளர்

அவரோடு நான் பணியாற்றிய

அண்ணாமலை, பாட்ஷா

அருணாசலம், வாலி, குஷி,

நேருக்கு நேர், ஆசை,

பஞ்ச தந்திரம் முதலிய

நூற்றக்கணக்கான படங்களின்

பாட்டு வெற்றிக்கு

தேவாவே காரணம்

தேவாவின் இசையைப்போல்

ரஜினிக்கு வேறு யாரும்

பொருந்தவில்லை என்றுதான்

ரசிகர்கள் பேசுவார்கள்

என்ன சொல்வது?

எனக்கு என் விரல்களில்

ஒன்று போய்விட்டது

அவரை இழந்துவாடும்

குடும்பத்தார்க்கும்

ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்

கவலைப்படாதே சகோதரா

என்று பாடியவனே!

இன்றுநான் கவலைப்படாமல்

என்ன செய்ய?

மு. க. ஸ்டாலின் இரங்கல் 

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.

பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர். எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர்.

உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.

குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

நாயகர்களுக்கான mass பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.


தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.
ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.

தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் விஜய் வேதனை 

தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கானா பாடகர்கள் வேதனை 

1989 ஆம் ஆண்டு வெளிவந்த 'மனசுக்கேத்த மகாராசா' என்கிற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான தேவா பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சென்னைத் தமிழின் தனித்துவமான இசை வடிவமான மெட்ராஸ் கானா பாடல்களைத் திரைப்படங்களில் பிரபலப்படுத்தியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

தேவாவின் மரணம் தமிழ் கலாச்சார இயக்கத்துக்கு பேரிழப்பு. திரையுலகினர் மட்டுமில்லாமல் கானா பாடகர்கள் பலரும் தேவாவின் மரணத்தால் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

இசையமைப்பாளர் தேவா மரணம்

தமிழ் திரையுலக வரலாற்றின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவா காலமாகியிருக்கிறார்.

இன்று காலையில் உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவா, காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

75 வயதாகும் அவரின் உயிர் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரிந்திருக்கிறது. முதல்கட்ட தகவல்கள் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்கின்றன.