1980-களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் உச்சபட்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் மக்கள் நாயகன் ராமராஜன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், மோகன், பிரபு, டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ் என எத்தனையோ இமயங்களுக்கு மத்தியில் தனி சாம்ராஜ்யம் நடத்தியவர் ராமராஜன்.
எங்க ஊரு பாட்டுக்காரன், ராசாவே உன்னை நம்பி, எங்க ஊரு காவல்காரன், பொங்கி வரும் காவேரி, கரகாட்டக்காரன், தங்கமான ராசா என ராமராஜனின் அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட்டானது.
இதனிடையே 90-களின் பிற்பகுதியில் அரசியல் வருகை மற்றும் எதிர்பாராத விபத்து போன்ற காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கினார் ராமராஜன். இதையடுத்து மேதை படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்ட ராமராஜன், சமீபத்தில் சாமானியன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
கடந்த மே 23-ம் தேதியன்று சாமானியன் திரைப்படம் வெளியான நிலையில் படம் படு சுமாராக இருந்ததாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். சாமானியன் திரைப்படம் இதுவரை 15 லட்சத்துக்கும் குறைவாகவே வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே திரைப்படம் ஓடாததற்கு ராமராஜன் தரப்பில் பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்திற்கு சென்று சாமானியன் திரைப்படத்தை ரசிகர்களோடு பார்த்து மகிழ்ந்தார் ராமராஜன்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், தனது படத்திற்கு தயாரிப்பாளர் போதுமான விளம்பரம் கொடுக்கவில்லை என்றும், ஆபரேஷன் சக்ஸஸ் என கூறி விட்டு சாமானியன் எனும் குழந்தையை கொன்று விட்டார் என்றும் கூறியிருந்தார்.
மேலும் சாமானியன் படத்திற்கு தனக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் தயாரிப்பு நிறுவனம் பாக்கி வைத்து விட்டதாகவும் அதிரடி காட்டினார்.
ராமராஜனின் இந்த பேச்சுக்கு திரைப்படத்தின் தயாரிப்பாளர் மதியழகன், ராமராஜன் மீது எதிர் புகாரை வைத்துள்ளார். அதாவது, திரைப்படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே அனைத்து திரையரங்குகளுக்கும் ராமராஜன் விசிட் அடித்திருந்தால், கூட்டம் கூடியிருக்கும் என்றும், 19-வது நாளன்று சென்றால் எங்கிருந்து கூட்டம் வரும் என்றும் பதிலளித்தார்.
ராமராஜனின் ரசிகர்கள் 80’ஸ் கிட்ஸ்-களும் அல்ல, 90’ஸ் கிட்ஸ்களும் அல்ல.. அவர்கள் 70’ஸ் கிட்ஸ். தற்போது சினிமா டிஜிட்டல் யுகமாகியிருப்பதை ராமராஜன்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மதியழகன் கூறினார்.
சம்பள பாக்கி என்ற ராமராஜனின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியவர், மக்களின் ரசனை முற்றிலும் மாறிப்போய் விட்டதாகவும் பதிலளித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ-எண்ட்ரி கொடுத்த ராமராஜன், படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்காமல், தயாரிப்பாளர் மீது குற்றம் சாட்டுவதும், தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவிப்பதும் என தடுமாறி போயிருக்கிறது சாமானியன் படக்குழு.