பொழுதுபோக்கு

அரசியலுக்கு வருகிறாரா சசிகுமார்?.. ‘சினிமாவில் எல்லாமே மாறிடுச்சு’ - செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சொன்ன அந்த ஒரு பதில்!

ஒரு நிரபராதியைக் காப்பாற்றுவதற்காக ஒரு போலீஸ் அதிகாரி போராடும் கதையாக இது அமைந்துள்ளது...

Mahalakshmi Somasundaram

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘வதந்தி 2’ வெப் தொடரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் சசிகுமார், இயக்குநர்கள் புஷ்கர்–காயத்ரி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிகுமார், தனது புதிய கதாபாத்திரம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “நான் இதுவரை சுமார் 30 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், என்னை யாருமே போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இதுவரை யோசித்ததில்லை.

முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியபோது என்னாலேயே நம்ப முடியவில்லை. பொதுவாக மதுரையைச் சேர்ந்தவர்களை மையமாக வைத்து இயக்கப்படும் கதை என்றாலே, எங்களை ரவுடிகளாகத்தான் திரையில் காட்டுவார்கள். அதனால் போலீஸ் கதாபாத்திரம் என்று சொன்னவுடனேயே கதையைக் கேட்க ஆரம்பித்தேன்” என்றார். மேலும், “ஒரு நிரபராதியைக் காப்பாற்றுவதற்காக ஒரு போலீஸ் அதிகாரி போராடும் கதையாக இது அமைந்துள்ளது. கதையைக் கேட்டவுடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது” என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து இயக்குநர்கள் புஷ்கர்–காயத்ரி, தாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்தான் சசிகுமார் இயக்கி நடித்த ‘சுப்பிரமணியபுரம்’ படத்தைப் பார்த்ததாகக் கூறினர். அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த சசிகுமார், “உங்களுடைய ‘ஓரம் போ’ படத்தைப் பார்த்த பிறகுதான் நான் ‘சுப்பிரமணியபுரம்’ படத்தை எடுத்தேன்” என்று நகைச்சுவையாக கூறினார். படப்பிடிப்பு அனுபவம் குறித்து சசிகுமார் கூறுகையில், “காலை 9 மணிக்குத் தொடங்கும் படப்பிடிப்பு, சில நாட்களில் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து நடைபெறும். அந்த அளவுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருந்ததால், சில நாட்கள் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது” என்றார்.

இதனிடையே, தற்போது சில நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில் “நீங்கள் எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவீர்களா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சசிகுமார், “சினிமாவில் எல்லாமே மாறிவிட்டது. ஆனால், ‘அரசியலுக்கு வருவீர்களா?’ என்ற கேள்வி மட்டும் இன்னும் மாறவே இல்லை” என்று நகைச்சுவையாகக் கூறினார். தொடர்ந்து, தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுபடுத்திய அவர், “எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. நான் நடிக்கத்தான் வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.