தென்னிந்திய திரையிசையின் ஒப்பற்ற பின்னணிப் பாடகிகளில் ஒருவராகவும், ரசிகர்களால் "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது முதிர்வு காரணமாக மைசூருவில் காலமானார். அவரது மறைவு, இந்திய திரையுலகிற்கும் இசை ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. எல்லோரும் அவரை ஜானகி அம்மா என்று அழைக்கும் அளவிற்கு இசை ரசிகர்களை தனது இனிமையான குரலாலும் குணத்தாலும் கட்டிப்போட்டவர். அவரது மறைவு செய்தி வெளியாகியதும், திரைப்பட பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1938 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த எஸ். ஜானகி, சிறுவயதிலிருந்தே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது இனிமையான குரல் மற்றும் தனித்துவமான பாடும் பாணியால் மிகக் குறுகிய காலத்திலேயே திரைப்பட உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். 1957 ஆம் ஆண்டு வெளியான 'விதியின் விளையாட்டு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பெண் என் ஆசை பாழானது' என்ற பாடலின் மூலம் திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். அதே ஆண்டில் தெலுங்கு திரைப்படங்களிலும் பாடும் வாய்ப்பு கிடைத்தது. முதல் ஆண்டிலேயே பல மொழிகளில் பாடல்களைப் பாடி தனது திறமையை நிரூபித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரா உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் எஸ். ஜானகி பாடியுள்ளார். தனது இசைப் பயணத்தில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பதிவு செய்து, இந்திய திரையிசை வரலாற்றில் மிக அதிக பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகிகளில் ஒருவராக திகழ்ந்தார்.
எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், கே.வி. மகாதேவன், எம்.எம். கீரவாணி உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களை அவர் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். அவரது குரலில் வெளிவந்த காதல், சோகம், தாலாட்டு, பக்தி மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான நான்கு தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள எஸ். ஜானகி, பல மாநில அரசுகளின் விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான கவுரவங்களையும் பெற்றுள்ளார். இந்திய இசை உலகில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக பல்வேறு அமைப்புகள் அவரை பாராட்டியுள்ளன.
ஆறு தசாப்தங்களுக்கு மேலாக நீண்ட அவரது இசைப் பயணத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த எஸ். ஜானகி, கடந்த 2016 ஆம் ஆண்டு திரைப்படங்களில் பின்னணிப் பாடுவதை நிறுத்தி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், அவரது பாடல்கள் இன்றும் பல தலைமுறைகளின் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இசைக்கு மொழி எல்லை இல்லை என்பதை தனது குரலால் நிரூபித்த எஸ். ஜானகியின் மறைவு இந்திய திரையிசை உலகிற்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது இனிமையான குரலும், ஆயிரக்கணக்கான காலத்தால் அழியாத பாடல்களும் என்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.