நடிகை சௌகார் ஜானகி மரணம் - முதலமைச்சர் விஜய் இரங்கல்! 
பொழுதுபோக்கு

நடிகை சௌகார் ஜானகி மரணம்: "அதிர்ச்சியும் வேதனையும்..." - முதலமைச்சர் விஜய் இரங்கல்!

நடிகை சௌகார் ஜானகி மரணத்திற்கு முதலமைச்சர் விஜய், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு வயது 94.

இந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த மூத்த நடிகை சௌகார் ஜானகியின் மறைவு, ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் முதலமைச்சர் விஜய், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய் பதிவு

அவரது பதிவில், "பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.

திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

சௌகார் ஜானகி

சங்கரமஞ்சி ஜானகி என்ற இயற்பெயர் கொண்ட இவர், சௌகார் ஜானகி என்றே திரையுலகிலும் ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் கடந்த 70 ஆண்டுகளாக 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான மூத்த கலைஞராகத் திகழ்ந்தார்.

திரைத்துறை மற்றும் கலை உலகிற்கு இவர் ஆற்றிய வாழ்நாள் சேவையைப் பாராட்டி, ஒன்றிய அரசு 2022-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கௌரவித்தது.

அஞ்சலிக்காக வைக்கபடும் உடல்

மறைந்த நடிகை சௌகார் ஜானகிக்கு யக்னா பிரபா கோட்டி, வெங்கடரமண சங்கரமஞ்சி, சசி ராவ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

தேனாம்பேட்டையிலுள்ள அவருடைய இல்லத்தில் இன்று மாலை 5 மணி முதல், அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்