பொழுதுபோக்கு

வாரிசு ரிலீஸ் சிக்கல்...மாவட்ட  நிர்வாகிகளை சந்திக்கும் தளபதி விஜய் ...

Malaimurasu Seithigal TV

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட  நிர்வாகிகள்  மற்றும் அணி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டமானது சென்னை பனையூரில் உள்ள இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று காலை முதல் தொடங்கியது.

குறிப்பிட்ட காலத்திற்கு இடையில்  தனது ரசிகர்களை விஜய் இந்த அலுவலகத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம் ,அதேபோன்ற நிகழ்வு தான் தற்போது இங்கு நடைபெற்று வருவதாக ரசிகர்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது.இதற்காக நாமக்கல் ,சேலம் ,காஞ்சிபுரம், போன்ற மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காலை முதலே பேருந்துகள்  மூலம் இங்கு வந்திறங்கினர்.

இங்கு வரக்கூடிய அனைத்து தொண்டர்களுக்குமே ரசிகர் மன்ற அடையாள அட்டை , தற்காலிக அடையாள அட்டை ,ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அவற்றை சரிபார்த்த பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்படும்போது மக்கள் இயக்கத்தின் தலைவர் புஷி ஆனந்த் அவர்களை வரவேற்றார்.

சாதாரணமாக தொண்டர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி என்று தெரிவித்திருந்தாலும் வாரிசு திரைப்படம் வெளியிடுவதில் குறித்த சிக்கல்கள் குறித்து விவாதிப்பதற்காகவே ஆலோசனை கூட்டம் என்று மறுபுறமும் பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பனையூர் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் அட்டையை கையில் ஏந்தியபடி "விஜயை பார்க்க வேண்டும் அவரது குழந்தையை பார்த்து விஜய்யுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் "என்பதற்காக அவரது அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.பொன்னேரியை சேர்ந்த மணி மாலா என்கின்ற ஏழு மாத கர்ப்பிணி பெண் அந்த பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக போட்டியிட்டு தற்பொழுது கவுன்சிலராக பதவி ஏற்று வருகிறார். விஜயை நேரில் சந்தித்து அவருடன் ஆசி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக வெளியில் காத்துக் கொண்டுள்ளார்.

தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஷி ஆனந்த் தலைமையில் தொண்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொண்டர்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு எந்த மாதிரியான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்பது தெரியவரும் என தகவல்.