கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் "உங்களது பிரியாணிக்கு நீங்களே பணம் செலுத்துங்கள் பெண்களே" என்றும், ரூ. 370 செலுத்திவிட்டு இப்படியா? என்ற ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது என்பதுதான் சமூகவலைதளபக்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது என்ன விஷயம் என்று சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்ன என்று விரிவாக பார்க்கலாம்.
சமீபத்தில் ஸ்டாண்டப் காமெடியன் பிரணித் மோரின் நிகழ்ச்சியின் போது குருகிராம் நகரைச் சேர்ந்த ஹிமான்ஷு ஜங்ரா, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வைரலானார். அதாவது அவர், ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்றபோது ரூ. 370க்கு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதன் பின்பு, தன்னை வீட்டில் விடும்படி அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர் செலவழித்த ரூ. 370-க்கு அவர் பிரதிபலன் எதிர்பார்த்ததாக கூறியுள்ளார். இது இணையதளத்தில் பெரும் பேசுபொருளானது. வெறும் ரூ. 370 செலவு செய்துவிட்டு ஒரு பெண்ணை கேட்பதா? என்று கொந்தளித்து தங்களது பதிவுகளை பகிர்ந்துவந்தனர்.
அதன் பிறகு, இந்த விவகாரம் ஜங்ராவின் பணியிடத்தின் பக்கம் திரும்பியது. அவரது முதலாளியான, குருகிராம் நகரைச் சேர்ந்த பிராண்டிங் மற்றும் சமூக ஊடக நிறுவனமான ஸ்டார்விக் டிசைன், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களிடமிருந்து செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் அழைப்புகளால் திக்குமுக்காடச்செய்தது. நிறுவனத்தின் நிறுவனர் விவேக் விஸ்வகர்மா, இறுதியில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு காணொளியில் இந்த நிலை குறித்துப் பேசினார். அலுவலகத்திற்கு வெளியே நடந்த விஷயம் அலுவலகத்திற்கு உள்ளே எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவரை பற்றி மற்ற பெண் ஊழியர்களிடம் அவர் தவறாக நடந்துகொள்ளவில்லை என்றும், வேலை விஷயத்தில் கடும் உழைப்பாளியாகவும், நன்கு பழக கூடியவராகவும்தான் இருந்துள்ளார் என்று அவர் பேசினார்.
செயல்களுக்கு விளைவுகள் இருக்க வேண்டும் என்றாலும், மக்கள் சிந்திப்பதற்கும், மன்னிப்புக் கேட்பதற்கும், தங்களைத் திருத்திக்கொள்வதற்கும் சமூகம் இடமளிக்க வேண்டும் என்று விஸ்வகர்மா வாதிட்டார். ஜங்ராவுக்கு 22 வயதுதான் ஆகிறது என்றும், இந்தச் சம்பவத்தின் விளைவுகளை அவர் நீண்ட காலத்திற்குச் சுமக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவும் நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றால் அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கமாட்டார்கள் என்றும் அவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். தற்போது அவர் பேசிய அந்த காணொளி வைரலானதை தொடர்ந்து 22 வயது இளைஞனாக வேலையின்மையை சந்திக்க நேர்ந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.