பிரபல நடன இயக்குனர் பிருந்தாவின் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘ஹே சினாமிகா’. இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைத்ரும், முக்கிய கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால், மிர்ச்சி விஜய், நட்சத்திரா நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த ட்ரெய்லரில் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைத்ரி ரொமான்ஸ் காட்சிகளும் மற்றும் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட நட்பு மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளும் அடங்கியுள்ளது. காஜல் அகர்வாலின் நட்பால் துல்கர் சல்மானின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை தான் படத்தின் கதையாக இருக்கும் என இந்த ட்ரெய்லரிலிருந்து எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் பிரியறதுக்கு ஆயிரம் வழி இருக்கு, ஆனா சேர்ந்து வாழ ஒரே காரணம் காதல்' என்ற ஒரே வசனம் இந்த படத்தின் கதையை சொல்வதாக அமைந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி 'ஹே சினாமிகா’ திரையரங்குகளில் வெளியாக உள்ளது.