உயிரைக் கொடுத்து நடிப்பார் என்று சில நடிகர்களை நாம் சொல்வதுண்டு.. அப்படி உயிரைக் கொடுத்து படத்தில் நடித்துள்ள யஷ்-க்கு நியாயம் சேர்த்துள்ளதா டாக்சிக்?
ஒரு திரைப்படத்தை பார்த்தால் ஏதாவது ஒரு காட்சியாவது பார்வையாளர்களை Influence செய்திருக்க வேண்டும். ஆனால், யஷ் எனும் முகத்தைத் தவிர எந்த ஒரு நபரோ, எந்தவொரு காட்சியோ, எந்தவொரு வசனமோ, எந்தவொரு தருணமோ உங்களை Influence செய்ய வாய்ப்பே இல்லாத படம் இந்த டாக்சிக் என்பதை அவர்களின் கடும் உழைப்பையும் மீறி சொல்லத் தான் வேண்டியுள்ளது.
யஷ்.. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால்.. KGF படம் மூலம் இவர் நம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். KGF-2 வில் ஒரு மாபெரும் மாஸ் ஹீரோவாக இந்தியா முழுவதும் உருமாறினார். ஆனால், டாக்சிக் படத்தில் அவர் காட்டியிருக்கும் நடிப்பு இல்லை.. இல்லை.. வெறி கொண்டு அவர் ஆடியிருக்கும் ஆட்டம் என்பது அட்லான்டிக் கடலின் நள்ளிரவு குளிரை விட கூர்மையானது. இந்த படத்தில் மிக மோசமாக எழுதியிருக்கும் தமிழ் வசனங்களை கட்சிக்கு காட்சி கேட்டு சிரித்துக் கொண்டே (தியேட்டரே சிரிக்கும்) உங்கள் மனம் அவரது அந்த அசுர நடிப்பை பார்த்து மிரண்டு கொண்டே இருக்கும்.
வசனத்தை கேட்டு சிரிப்பீங்க..
அவரது நடிப்பை உங்கள் உள் மனம் மிரண்டு போய் ரசிக்கும்..
வசனத்தை கேட்டு சிரிப்பீங்க..
அவரது நடிப்பை உங்கள் உள் மனம் மிரண்டு போய் ரசிக்கும்..
இந்த Scenario படம் முழுவதும் ரிப்பீட் ஆகிட்டே இருக்கும். ரிலீஸுக்கு முன்பு சென்னையில் நடந்த இப்படத்தின் நிகழ்வில் இயக்குனர் கீது மோகன்தாஸ் சொன்ன விஷயங்கள் அத்தனையும் ஹைப். ஒன்றே ஒன்றை தவிர.. ஆம்! இந்த டாக்சிக், யஷ்ஷின் 2.O.. ஆனால், இந்த கொடூர உழைப்புக்கு படம் தந்த பரிசு!?
கோவாவில் 1947 டூ 1970 காலக்கட்டத்தில் நடக்கும் கதை இது. தவறான நடத்தைக் கொண்ட தாயால் அநாதைகளாக நிற்கும் யஷ் மற்றும் அவரது அக்கா நயன்தாரா தாங்கள் கொடுமைகளை அனுபவித்த அதே இடத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். யஷ்ஷுக்கு அம்மா, அக்கா, உலகம் எல்லாமே நயன்தாரா தான். அக்காவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நடந்து கொள்கிறார் யஷ். ஆனால், அங்கே உள்ள நம்பர்.1 டானின் மகளை பார்த்தவுடன் பரவசமாகி படுக்கையில் வீழ்த்துகிறார். அதே ஊருக்கு சர்க்கஸ் போட வந்த கியாரா அத்வானியை பார்த்தவுடன் பரவசமாகி படுக்கையில் வீழ்த்துகிறார். இதற்கு இடையில் ஏகப்பட்ட பெண்களுடனும் படுக்கையை பகிர்கிறார். பார்க்கும் அத்தனை பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்.. அல்லது கூப்பிடுகிறார்.
இது ஒருபக்கம் இருக்க.. பார்க்கும் அத்தனை ஆண்களையும் கொல்கிறார்.
ஒன்று.. பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கையில் வீழ்த்துகிறார். இல்லையெனில், பார்க்கும் ஆண்களை எல்லாம் வெட்டியோ, துப்பாக்கியாலோ கொல்கிறார்.
படுக்கை விஷயங்களை கூட ஹாலிவுட் போன்று ஏதோ முயற்சி செய்கிறார்கள் என்று கடந்து சென்றுவிடலாம். ஆனால், இத்தனை நபர்களை கொல்வதற்கு எந்தவொரு வலுவான காரணங்களையோ, காட்சிகளையே கடைசி வரை இயக்குனர் சொல்லவில்லை. எந்தவொரு கொள்கை பிடிப்பும் இன்றி.. குறைந்தபட்சம் ஒரு மனிதனுக்கான எந்தவொரு தகுதியும் இன்றி யஷ்ஷின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் டாக்சிக் படத்தின் மாபெரும் மைனஸ்.
இயக்குனர் கீது, சூழல்கள் தான் யஷ்ஷை ஒரு மோசமான மனிதனாக, மோசமான செய்கைகளை, சம்பவங்களை நிகழ்த்துபவனாக மாற்றுகிறது என்று சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அது Common ஆடியன்ஸுக்கு Convey ஆகவில்லை. ஒரு சாதாரண சினிமா ரசிகனை திருப்திப்படுத்த ஒரு வலுவான ஹீரோவும் அவரை விட வலுவான வில்லனும் இருந்தாலே போதும். ஒரு ஆக்ஷன் படமாக அதை தேற்றிவிடலாம். ஆனால், டாக்சிக் எந்தவொரு நபரையும் இவர் தான் வில்லன் என்றும் சொல்லவில்லை. எந்தவொரு சூழலையும்.. இது தான் யஷ் ஏற்றுள்ள அந்த கதாபாத்திரம் இப்படி மாறியதற்கு காரணம் என்றும் சொல்லவில்லை. இதனால் யஷ் எவ்வளவு மாஸ் காட்டி நடித்தாலும், ஆடியன்ஸுக்கு எந்தவொரு High Feel-லும் வரவே இல்லை.
இதனால் அவர் தன்னுடன் இருக்க வேண்டிய, தன் மீது உயிரையே வைத்திருக்கக் கூடிய அத்தனை உறவுகளையும் இழக்கிறார். இதனால் மனவேதனை அடைந்து அதிலிருந்து தன்னை தேற்ற இம்முறை டஜன் கணக்கான பெண்களுடன் படுக்கையில் இருக்கிறார்.
கர்நாடகாவில் இருந்து வராத காவிரி நீரை விட அதிகமாக வயிற்றுக்குள் மதுவை ஊற்றுகிறார், கூடவே பொதிகை மலையை மறைக்கும் அளவுக்கு புகையையும் விடுகிறார்.
பெண் + பெண்கள் + பெண்கள்ள்ள்ள் + குடி + புகை என்ற வாழ்ககையை இரண்டாம் பாதி முழுக்க வாழ்கிறார். யஷின் மகனாக பழிவாங்கும் ஜுனியர் யஷ்ஷாக உடல்மொழி, நடிப்பு என்று நாம் முன்பே சொன்னது போல் உங்களை உங்களுக்கே தெரியாமல் சிம்மாசனம் போட்டு ஆட்கொண்டு விடுகிறார். ஆனால், அதனால் அம்மஞ்சலிக்கு பிரயோஜனம் திரைக்கதையில் இல்லை என்பதே வேதனை.
கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் என அனைவரின் வாழ்க்கையிலும் விளையாடி அதனால் அவரும் நொந்து, பார்ப்பவர்களையும் நோக வைத்துவிட்டார். படத்தில் ஒரேயொரு ஆறுதல் அந்த கிளைமேக்ஸ் தான்.. ஆனால், அதிலும் அவருக்கும் வேதனையை கொடுத்து ஆடியன்ஸுக்கு 'ச்சை' ஃபீலிங்கை கொடுத்த இயக்குனர் கீது மோகன்தாஸ் வாழ்க.
யஷ் உண்மையில் பாவம் தான்! இப்படியொரு நடிப்பு வீணாகி இருக்கக் கூடாது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்