பொழுதுபோக்கு

தொகுதிக்கு லீவுவிட்ட உதயநிதி: அடுத்த மூனு மாசம் ஷூட்டிங்கில் பிஸி...

மீண்டும் படம் நடிக்க செல்லும் உதயநிதி ஸ்டாலின்..!

Malaimurasu Seithigal TV

கடந்த சில தினங்களாக முதல்வன் பட அர்ஜூன் போல தொகுதி மக்களுக்கு தெரிந்தவர் என்றால் அது உதயநிதி ஸ்டாலின் தான். கலைஞரின் மறைவுக்கு பிறகு ஸ்டாலின் கட்சியின் தலைமைப் பொறுப்பையும், உதயநிதி தந்தையின் திமுக இளைஞர் அணி செயலாளர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். 

நடந்து முடிந்த தேர்தலில் தாத்தாவின் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் படி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் உதயநிதி. நாள்தோறும் தொகுதியின் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள மக்களின் கோரிக்கைகளை பெற்றார். 

இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியும் நுழையாத பகுதிகளுக்கு சென்ற உதயநிதி பொதுகழிப்பிடத்தை கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் அலசி ஆராய்ந்தார். இதனை கண்டு தொகுதி மக்கள் மிகவும் நெகிழ்ந்து, முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக கலக்கிய அர்ஜூனின் கதாபாத்திரத்தை நேரில் காண்பது போல் இருப்பதாக தெரிவித்தனர். இவரது இத்தகைய செயலுக்கு மக்களிடம் இருந்து வரவேற்பு இருந்தாலும், திமுகவின் சீனியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இவர் தொகுதிக்கு சென்றால் அவர்களும் செல்ல வேண்டியிருக்குமே.. அதனால் தான்.

இது ஒருபுறம் இருக்க, எதிர்கட்சியரான அதிமுக நிர்வாகிகள், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு முடங்கியுள்ளதால் தான் இங்கு வந்து சீன் போடுவதாகவும், படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் தொகுதிக்கு குட்பை சொல்லி விடுவார் எனவும் குற்றம்சாட்டி வந்தனர். அதனை தற்போது நிரூபணமாக்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். 

தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், போன ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு, தேர்தல் வேலைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட படத்தில் மீண்டும் நடிக்க செல்கிறாராம் உதயநிதி. இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் உதயநிதிக்கு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்த நிதி அகர்வால் நடிக்கவிருக்கிறார். சென்னையிலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இப்படத்திற்காக செல்ல இருக்கிறார் உதயநிதி. இந்தப் படத்தை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆக, அரசியல் வாழ்க்கைக்கு சில நாட்கள் பிரேக் விடும் உதயநிதி, அதிமுகவினர் கூறி வந்ததை தற்போது உண்மையாக்கவுள்ளதாக கிசு கிசுக்கப்படுகிறது. தொடர்ந்து பாலிவுட்டில் வெளியாகி ஹிட் அடித்த ஆர்டிகள் 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் உதயநிதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.