பொழுதுபோக்கு

விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது!

Malaimurasu Seithigal TV

விஜய் சேதுபதி, காயத்திரி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான படம் தான் மாமனிதன். ஐந்தாண்டு தாமதத்திற்குப் பிறகு, திரையரங்குகளில் வெளியான இந்த படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்புப் பெறவில்லை என்றாலும், ஆஹா என்ற தனியார் ஒடிடி தளத்தில் வெளியாகி, உலக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு விமர்சன ரீதியாக பெற்றது.

உலகளவில் பெரும் வரவேற்புப் பெற்று, வசூல் வேட்டை செய்த கமல் படமான விக்ரம் வெளியாகிய அதே நேரத்தில், பெரியளவில் விளம்பரம் இல்லாமல் இந்த மாமனிதன் படம் வெளியானது.

சமீபத்தில், பல மாணவர்கள், நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டு, பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவத் துறை சேர விரும்பும் மாணவர்கள் தளறாமல், வேறு படிப்புகளையும் படிக்கலாம் என அறிவுரைக் கூறும் படமாக இந்த படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீப ஆண்டுகளில் பெரும் சர்ச்சைக்குறிய விஷயமாக இருக்கும் நீட் தேர்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த மாமனிதன் படத்தில், சமூக கருத்துகள் நிறைந்துள்ளன. நீட் போன்ற தேர்வுகளைக் கண்டு மாணவ மாணவிகள் பயப்படக்கூடாது என்றும், டாக்டர் இல்லை என்றாலும், மருத்துவத் துறையில் வெவ்வேறு படிப்புகள் உள்ளன என்றும், கருத்துக் கூறும் இந்த படம், தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு உருவாகியிருந்தது.

தென்மேற்குப் பருவக்காற்று என்ற படத்தின் மூலம், கோலிவுட்டிற்கு விஜய் சேதுபதியை அறிமுகம் செய்த சீனு ராமசாமி, தொடர்ந்து, இடம் பொருள் ஏவல், தர்மதுரை போன்ற படங்கள் கொடுத்தார். தற்போது வெளியாகியுள்ள மாமனிதன் படத்தின் மூலம், அவர்களது கூட்டணி பலராலும் வரவேற்கப்பட்டது.

இதனை மேம்படுத்தும் வகையில், டோக்கியோ நகரில், இந்த படம், சிறந்த படம் என்ற விருது பெற்றுள்ளது. பின், சேலத்தில், சமீபத்தில்,  இந்த படத்தை கௌரவிக்கும் வகையில், ஒரு விழா நடத்தி, இயக்குனர் சீனு ராமசாமிக்கு, ‘மாமனிதன்’ விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இண்டோ-ஃப்ரெஞ்சு திரைப்பட விழாவில், கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி கொடுத்துள்ளது.

சுமார் 8 வருட கடும் போராட்டத்திற்குப் பிறகு, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு தகுதியான விருது தான் இது என ரசிகர்கள் ஒரு பக்கம் பெருமிதம் கொள்ள, அனைவரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.