பொழுதுபோக்கு

ரிலீஸான’வாடா தம்பி’ லிரிக்கல் வீடியோ...குவியும் லைக்ஸ்...

’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது...

Malaimurasu Seithigal TV

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹூரோவான நடிகர் சூர்யா, சமீபத்தில் ஓ.டி.டி யில் வெளியிட்ட ‘ஜெய்பீம்’ படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. 

இதனைத்தொடர்ந்து, தற்போது சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர் , அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின்  ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ’வாடா தம்பி’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் எழுதிய இந்தப்பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு பாடலை எழுதியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என  5 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ள  இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்கள் ஓடிடி தளத்திலேயே ரிலிஸ் செய்யப்பட்ட நிலையில்,  எதற்கும் துணிந்தவன்  தியேட்டரில் ரிலீஸ் ஆகவுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.