உடலின் நோய் எதிர்ப்புச் சக்திதான் (Immunity) நம்மைப் பலவிதமான நோய்த்தொற்றுகளில் இருந்தும், காய்ச்சல், சளி போன்ற உடல்நலக் குறைபாடுகளில் இருந்தும் காக்கும் முதல் கேடயம். இந்தக் காலத்தில், நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலேயே நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தக்கூடிய பல அரிய சத்துக்கள் நிறைந்துள்ளன என்று சுகாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சரியான உணவுப் பழக்கத்தின் மூலம், நம் உடலின் பாதுகாப்பை நாம் பல மடங்கு அதிகரிக்க முடியும். குறிப்பாக, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த சில ஒன்பது வகையான உணவுகளைத் தினமும் எடுத்துக்கொள்வது மிக அவசியம்.
முதலில் இருப்பது, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் ஆகும். ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் வைட்டமின் சி சத்து ஏராளமாக உள்ளது. இந்த வைட்டமின் சி, நம் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை (White Blood Cells) அதிகமாக உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. இந்த வெள்ளை அணுக்கள்தான் நோய்த்தொற்றுகளுடன் போரிடும் முக்கியப் படைவீரர்கள். எனவே, இவற்றைத் தினமும் எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியை நேரடியாக உயர்த்தும். அடுத்ததாக, சிவப்பு குடை மிளகாயைச் சொல்லலாம். இதில் ஆரஞ்சுப் பழங்களைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி மற்றும் 'பீட்டா கரோட்டின்' (Beta Carotene) சத்தும் உள்ளன. இவை கண் மற்றும் தோல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், உடலில் ஏற்படும் வீக்கங்கள் (Inflammation) மற்றும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.
மூன்றாவதாக, வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட இஞ்சி உள்ளது. இஞ்சியில் உள்ள சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், தொண்டையில் ஏற்படும் புண் அல்லது வீக்கத்தைக் குறைத்து, நோய் எதிர்ப்புப் பாதுகாப்பை ஆதரிக்கிறது. நான்காவது, நமது பாரம்பரிய உணவில் இடம்பிடித்திருக்கும் பூண்டு. பூண்டில் உள்ள 'அல்லிசின்' (Allicin) என்ற வேதிப்பொருள் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. சாதாரணச் சளி மற்றும் பிற நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட இது உதவுகிறது. ஐந்தாவது, இலை வகைக் காய்கறிகளில் முக்கியமான பசலைக்கீரை. இதில் வைட்டமின் சி, ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளன. இந்தச் சத்துக்கள் உடலின் நோய்த்தொற்றுடன் சண்டையிடும் ஆற்றலை அதிகரிக்கின்றன.
ஆறாவது மற்றும் ஏழாவது உணவாக, பாதாம் பருப்பு மற்றும் பச்சைத் தேநீர் (Green Tea) ஆகியவை உள்ளன. பாதாம் பருப்பில் அதிக அளவில் வைட்டமின் இ சத்து உள்ளது. இது நோய் எதிர்ப்புச் செல்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்காத்து, ஒட்டுமொத்தப் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. பச்சைத் தேநீரில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள், நோய்களுடன் சண்டையிடும் சக்தியை அதிகரித்து உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கின்றன. எட்டாவது உணவு, ஒரே ஒரு சிறிய பப்பாளிப் பழம். ஒரு சிறிய பப்பாளி, ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவையான 100% வைட்டமின் சி சத்தை அளிக்கிறது. இதில் உள்ள 'பப்பைன்' (Papain) என்னும் நொதி, வீக்கத்தை எதிர்த்துப் போராடும் சக்தியைத் தருகிறது.
இறுதியாக, ஒன்பதாவது உணவாக சூரியகாந்தி விதைகள் உள்ளன. இந்தச் சிறிய விதைகளில் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் துத்தநாகம் (Zinc) போன்ற முக்கியமான தாது உப்புகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டிற்கு மிக அவசியமான சத்துக்கள். மேலும், வீக்கத்தைக் குறைப்பதிலும் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஒன்பது உணவுகளையும் நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், எந்தவித நோய்த்தொற்றும் அண்டாத வகையில் நம் உடலைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.