இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான பெண்களுக்கு புடவை என்பது வெறும் உடை அல்ல. அது ஒரு பாரம்பரியம், அடையாளம், மற்றும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி. பல பெண்களால் பாதுகாப்பாகவும், வசதியான உடையாக கருத்தப்பட்டலாலும் இதனால் புற்றுநோய் ஏற்படும் என்ற புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
“சேலைப் புற்றுநோய்” என்றால் என்ன?: “சேலைப் புற்றுநோய்” (saree cancer) என்பது சேலை அணிவதால் நேரடியாக வரும் ஒரு நோய் அல்ல. மிக அரிதாக ஏற்படும் இந்த நோய், நீண்ட காலமாக ஒரே இடத்தில் தொடர்ச்சியான உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக இடுப்புப் பகுதியின் தோலில் மாற்றங்கள் ஏற்பட்டு, அதிலிருந்து புற்றுநோய் உருவாகும் என்று ஆய்வு கூறுகிறது. முக்கியமாக, சேலையை மிகவும் இறுக்கமாக கட்டுதல், அல்லது உள்பாவாடையை நீண்ட நேரம் மிக இறுக்கமாக அணிதல் போன்ற காரணங்களால் அந்த பகுதியில் வியர்வை, உராய்வு, எரிச்சல் அதிகரிக்கலாம். இது காலப்போக்கில் தோலில் தடித்தல், நிறமாற்றம் அல்லது சிறிய காயங்கள் போன்ற மாறுதலுக்கு உள்ளாகலாம்.
இது எப்படி உருவாகிறது?: மேலும், இந்த பிரச்சனை ஒரே நாளில் ஏற்படுவதில்லை. பல ஆண்டுகள் ஒரே இடத்தில் தொடர்ந்து ஏற்படும் உராய்வின் விளைவாக இது மெதுவாக உருவாகிறது. ஆரம்பத்தில், சிறிய அரிப்பு, தோல் கருமையாக மாறுதல், தடித்த தோல் பகுதி போன்றவை ஏற்படும். இவை சாதாரணமாகத் தோன்றும் மாற்றங்களால், பலரும் இதை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் விட்டுவிடுகிறார்கள். ஆனால் தொடர்ச்சியான எரிச்சல் மற்றும் அழுத்தம் காரணமாக சில அரிதான சந்தர்ப்பங்களில் அது தீவிரமான தோல் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.
ஏன் இது கவனிக்கப்படாமல் போகிறது?: மிகப் பெரிய காரணம் ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமாகத் தோன்றுவதுதான். அரிப்பு, சிறிய கருமை, அல்லது தடிப்பு போன்றவை பெரும்பாலும் பெரிய பிரச்சனையாக தெரியாது. அதனால் பல பெண்கள் இதை வருடக் கணக்கில் கவனிக்காமல் இருக்கிறார்கள். ஆனால், புண் ஆறாமல் நீடிக்கும்போதும், தோலில் காயங்கள் உருவாகும்போதும், வலி அல்லது இரத்தம் வரும்போதும்தான் மருத்துவ உதவி தேடப்படுகிறது. இந்த தாமதமே இறுதியில் பிரச்சனையாக மாறிவிடுகிறது. முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், புடவை கட்டும்போது தவறான முறையில், மிக இறுக்கமாக, நீண்ட காலம் அணியும் பழக்கங்களே சில உடல் பிரச்சனைகளுக்கு காரணமாகலாம். சிறிய தோல் மாற்றங்களையும் அலட்சியம் செய்யாமல் கவனிப்பது மிக முக்கியம். ஆரம்பத்திலேயே கவனித்தால், இதுபோன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் தவிர்த்துவிடக்கூடிய ஒன்றாகவே உள்ளது. சுருக்கமாக சொல்லவேண்டுமெனில்,
“சேலைப் புற்றுநோய்” என்பது மிக அரிதான நிலை. ஆனால் உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் கவனித்து, ஆரோக்கியத்தை பாதுகாப்பதே சிறந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்