செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கும். ஆனால் அவற்றைத் தொடங்குவதற்குப் பதிலாக செல்போனைப் பார்ப்பது, சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிடுவது, தேவையில்லாத சிறிய வேலைகளைச் செய்வது எனப் பொழுதைக் கழிப்போம். முக்கியமான ஒரு மின்னஞ்சலுக்குப் பதில் அனுப்ப வேண்டும், அலுவலக அறிக்கையைத் தயாரிக்க வேண்டும், தேர்வுக்குப் படிக்க வேண்டும் அல்லது ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிந்திருந்தாலும், அதை நாளைக்கு ஒத்திவைத்துக் கொண்டே இருப்போம். இப்படிச் செய்பவர்களைப் பலரும் சோம்பேறிகள் அல்லது பொறுப்பற்றவர்கள் என்று நினைக்கலாம். ஆனால் உளவியல் ஆய்வுகள் இதற்குப் பின்னால் வேறு காரணங்களும் இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டுகின்றன.
ஒரு வேலையைத் தள்ளிப்போடுவதற்குக் காரணம் அந்த வேலையைச் செய்ய விருப்பமில்லாதது மட்டுமல்ல. அதைத் தொடங்கும்போது ஏற்படும் பயம், பதற்றம், தோல்வி குறித்த கவலை, குழப்பம், மன அழுத்தம் போன்ற உணர்ச்சிகளையும் எதிர்கொள்ள முடியாமல் இருப்பது ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். இதைத்தான் உளவியலில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் அல்லது நிர்வகித்தல் (Emotion Regulation) என்று குறிப்பிடுகின்றனர். உதாரணமாக, அலுவலகத்தில் முக்கியமான விளக்கக்காட்சி ஒன்றைத் தயாரிக்க வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அதைச் சரியாகச் செய்ய முடியுமா, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், ஏதேனும் தவறு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற எண்ணங்கள் தோன்றலாம். இதனால் வேலையைத் தொடங்குவதற்கே தயக்கம் ஏற்படும். அந்த நேரத்தில் செல்போனைப் பார்ப்பது அல்லது வீடியோ ஒன்றைத் திறப்பது மனதுக்கு உடனடி நிம்மதியைத் தரலாம். ஆனால் செய்ய வேண்டிய வேலை அப்படியேதான் இருக்கும். சிறிது நேரம் கழித்து அதே வேலை இன்னும் அதிகமான அழுத்தத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும்.
இந்தப் பார்வைக்கு ஆதரவாக 2013ஆம் ஆண்டு உளவியலாளர்கள் ஃபுஷியா சிரோய்ஸ் மற்றும் திமோத்தி பைச்சில் வெளியிட்ட ஆய்வு, வேலைகளைத் தள்ளிப்போடுவது தற்காலிகமாக மனநிலையைச் சரிசெய்யும் முயற்சியாக இருக்கலாம் என்று விளக்குகிறது. அதேபோல், 2007ஆம் ஆண்டு வெளியான உளவியல் ஆய்வுத் தொகுப்பில், ஒரு வேலையின் மீதான வெறுப்பு, தன்னம்பிக்கைக் குறைவு, திடீர் கவனச்சிதறல் போன்ற பல காரணிகள் இந்தப் பழக்கத்துடன் தொடர்புடையவை எனக் கண்டறியப்பட்டது.
ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட 2016ஆம் ஆண்டு ஆய்வில், உணர்ச்சிகளைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வேலைகளைத் தள்ளிப்போடும் பழக்கத்தைக் குறைக்க உதவுமா என்று ஆராயப்பட்டது. மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், எதிர்மறையான உணர்ச்சிகளைத் தாங்கிக்கொள்ளவும் அவற்றைச் சமாளிக்கவும் பயிற்சி பெற்றவர்களிடம் இந்தப் பழக்கம் குறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அப்படியானால் இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி மாறுவது? முதலில், ஒரு பெரிய வேலையை முழுமையாக முடிக்க வேண்டும் என்று நினைத்து மன அழுத்தத்தை அதிகரிக்க வேண்டாம். அதைச் சிறிய பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் என்றால் முதலில் கோப்பைத் திறப்பது, தலைப்பை எழுதுவது போன்ற எளிய செயல்களில் தொடங்கலாம். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் மட்டுமே வேலை செய்வதாக இலக்கு நிர்ணயிக்கலாம். அடுத்ததாக, ஏன் அந்த வேலையைத் தொடங்கத் தயங்குகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தோல்வி பயமா, சரியாகச் செய்ய முடியாது என்ற சந்தேகமா, வேலையின் அளவு அதிகமாகத் தோன்றுகிறதா என்பதை நமக்குள் கேட்டுக்கொள்ளலாம். தொடர்ந்து நம்மையே குறை கூறுவது பிரச்சினையை மேலும் அதிகரிக்கலாம். எனவே, சிறிய முன்னேற்றங்களையும் ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.
வேலைகளைத் தள்ளிப்போடுவது ஒவ்வொருவருக்கும் ஒரே காரணத்தால் ஏற்படுவதில்லை. சோர்வு, தூக்கமின்மை, கவனச்சிதறல், நேர மேலாண்மைக் குறைபாடு போன்றவையும் காரணமாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து முக்கியமான வேலைகளைத் தொடங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு, 'நான் ஏன் சோம்பேறியாக இருக்கிறேன்?' என்று கேட்பதைவிட, 'இந்த வேலையை நினைக்கும்போது எனக்கு என்ன உணர்வு ஏற்படுகிறது?' என்று கேட்டுப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கலாம். சில நேரங்களில் மாற்ற வேண்டியது நேர அட்டவணையை மட்டுமல்ல; அந்த வேலையை எதிர்கொள்ளும் மனநிலையையும்தான்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்