thailand  
லைஃப்ஸ்டைல்

தாய்லாந்து போகப்போறீங்களா? இனி இந்த ஒரு விஷயம் கட்டாயம் - இல்லன்னா உள்ள விடமாட்டாங்க!

குறைந்த விலையிலேயே இது இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது...

Mahalakshmi Somasundaram

தாய்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள், இனி தங்கள் பைகளை அடுக்கும்போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுதான் 'ஹெல்த் இன்சூரன்ஸ்' (மருத்துவக் காப்பீடு). தாய்லாந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவிட்டு, அதற்கான கட்டணத்தைச் செலுத்தாமல் செல்வதைத் தடுக்கவும், பயணிகளின் உடல்நலப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த புதிய முறையைக் கொண்டுவர அந்த நாட்டு அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தாய்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் பட்டானா ப்ரோம்பட் இது குறித்துப் பேசுகையில், நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், சுற்றுலா மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது தாய்லாந்து சுகாதார அமைச்சகம், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி, அங்கு வேலை செய்பவர்கள் மற்றும் குறுகிய காலப் பயணமாக வருபவர்களுக்கும் இந்த இன்சூரன்ஸ் முறையைக் கட்டாயமாக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது. வெளிநாட்டுப் பயணிகள் சிகிச்சை கட்டணத்தைச் செலுத்தாதபோது, அது தாய்லாந்தின் மருத்துவக் கட்டமைப்பிற்குப் பெரும் நிதிச் சுமையை உருவாக்குவதாக அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கான பிரீமியம் தொகை (கட்டணம்) எவ்வளவு என்பது இன்னும் முடிவாகவில்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்காத வகையில் மிகக் குறைந்த விலையிலேயே இது இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இந்தப் பிரச்சனை மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. குடியுரிமை மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து சரியாக இல்லாத பலருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவர்களின் உரிமைகளைத் தெளிவுபடுத்தி, அவர்களைத் தாய்லாந்தின் முக்கிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக, வெளிநாட்டுப் நோயாளிகள் பில் கட்டாமல் செல்வதைத் தடுக்க ஒரு வலுவான கொள்கையை உருவாக்க அதிகாரிகள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். அதே சமயம், தாய்லாந்தின் மருத்துவச் சேவை மிகவும் தரமானது மற்றும் வெளிப்படையானது என்பதையும் அமைச்சர் பட்டானா பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய்லாந்து தன்னை ஒரு பிராந்திய மருத்துவ மையமாக (Healthcare Hub) மாற்றிக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப எல்லை தாண்டிய மருத்துவச் சேவைகளை வழங்கவும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் நலிந்த பிரிவினருக்குச் சிகிச்சை அளிக்கவும் அந்த நாடு தயாராக உள்ளது. இதற்காகச் சர்வதேச அமைப்புகளின் உதவியையும் தாய்லாந்து நாடியுள்ளது. இது தொடர்பான முக்கிய ஆலோசனைகள் ஜெனிவாவில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. மொத்தத்தில், தாய்லாந்து செல்லும் பயணிகள் இனி தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு மருத்துவக் காப்பீட்டை எடுத்துச் செல்வது அவசியமாகப் போகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்